அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்
அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்
ADDED : டிச 02, 2025 03:10 PM

புதுடில்லி: அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வண்ணம், அனைத்து வகை புதிய ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது.
மொபைல்போன் பயனாளர்களை உளவு பார்க்கவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தன. இந் நிலையில் சஞ்சார் சாத்தி செயலி தொடர்பாக மத்திய அரசு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நிருபர்களிடம் கூறியதாவது;
உங்களுக்கு இந்த செயலி வேண்டாம் என்றால் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டியது இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அதை செய்து கொள்ளலாம். இந்த செயலியை அறிமுகப்படுத்த வேண்டியது எங்களின் கடமை. ஆனால் இதை அவரவர் செல்போன்களில் வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதை அதை பயன்படுத்துவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.

