20 பெட்டிகள்...! அதிகாலை பயங்கரம்...! தடம்புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்
20 பெட்டிகள்...! அதிகாலை பயங்கரம்...! தடம்புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்
ADDED : ஆக 17, 2024 08:12 AM

லக்னோ; உ.பி.யில் அதிகாலையில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல், குஜராத் மாநிலம் அகமாதாபாத் ரயில் நிலையத்துக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
கான்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது, எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் ரயிலின் 20 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. என்ன நடக்கிறது என்பதை உணர முடியாமல் பயணிகள் அலறினர்.
சில நிமிடங்கள் கடந்தே ரயில் தடம்புரண்டு இருப்பது தெரிய வர, பெட்டிகளில் இருந்த பயணிகள் அவசர, அவசரமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறையினர், ரயில்வே அதிகாரிகள் சம்பவ பகுதிக்குச் சென்றனர்.
எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள் பயணிகள் அனைவரும் வேறு ஒரு ரயில் நிலையம் சென்று அங்கிருந்து அவரவர் ஊர் செல்ல ஏதுவாக பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்ததும், அதன் காரணமாக ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது. இதில் ஏதேனும் சதிவேலை இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து மற்றும் பயணிகள் நிலை அறிய உதவி எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.