ADDED : நவ 08, 2024 02:29 AM
மூணாறு:கொச்சி - மூணாறு மாட்டுபட்டி அணை இடையே கடல் விமான சேவை துவங்குவதற்கான ஆய்வு நிறைவு பெற்றது.
'தென்னகத்து காஷ்மீர்' என வர்ணிக்கப்படும் மூணாறில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீரிலும், வானிலும் செல்ல தக்க வகையில் கடல் விமானம் (சீ பிளேன்) இயக்க முடிவு செய்யப்பட்டது.
கொச்சியில் அரசு வசம் உள்ள போல்ஹாட்டி பேலஸ் பகுதி கடலில் இருந்து மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணைக்கு விமானம் இயக்கப்படுகிறது.
அது தொடர்பாக மாட்டுபட்டி அணையில் இந்திய விமான நிலைய ஆணைய இயக்குனர், அணை பாதுகாப்பு துறை அதிகாரிகள், மின்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு படகு குழாமுக்கு அருகே 'வாட்டர் ஏரோட்ரம்' அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக எட்டு இருக்கைகளை கொண்ட விமானம் இயக்கப்படுகிறது. சாதாரண விமானங்களை விட கடல் விமானங்களில் ஜன்னல்கள் பெரிதாக காணப்படும் என்பதால் வானில் பறந்தவாறு இயற்கை எழிலை ரசிக்கலாம்.