ADDED : டிச 03, 2024 07:50 AM
பெங்களூரு: பாஸ்போர்ட் விசாரணைக்கு சென்ற என்ற இடத்தில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பெங்களூரு, பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாபுஜி நகரை சேர்ந்த இளம்பெண், உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக, பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பதாரரின் முகவரி உட்பட தகவல்கள் சரிதானா என்பதை ஆய்வு செய்ய, பேட்ராயணபுரா போலீஸ் நிலையத்தின் ஏட்டு கிரண், இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
இதுதொடர்பாக, பெங்களூரு மேற்கு மண்டல டி.சி.பி., அலுவலகத்தில், இளம்பெண் அளித்த புகாரில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பாஸ்போர்ட் சரி பார்க்க எங்கள் வீட்டிற்கு ஏட்டு கிரண் என்பவர் வந்தார். என்னிடம், 'உனது சகோதரர் மீது கிரிமினல் பின்னணி உள்ளது. உங்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் ரத்தாக வாய்ப்பு உள்ளது. எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார்.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். ஆனாலும், ஏட்டு கதவை மூடினார். 'யாரிடமும் சொல்ல வேண்டாம்' என கூறி, என்னை கட்டி அணைத்தார்.
அப்போது மற்றொரு அறையில், எனது சகோதரர் இருப்பதை கவனித்த ஏட்டு, என் சகோதரரை பார்த்து, 'நீ இங்கே இருப்பது தெரிந்து தான், இப்படி நடந்து கொண்டேன். உன் தங்கை, எனக்கும் தங்கை தான்' என கூறிவிட்டு, எந்த தகவலும் சொல்லாமல் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரையடுத்து, கிரணை சஸ்பெண்ட் செய்து நகர மேற்கு டி.சி.பி., கிரீஷ் உத்தரவிட்டார்.