ADDED : நவ 12, 2024 06:12 AM

விஜயபுரா: ''முஸ்லிம்களுக்கு ஆதரவாக சில முடிவுகள் எடுப்பதில் முதல்வர் சித்தராமையா பின்வாங்குகிறார். அவருக்கு அழுத்தம் கொடுப்பது யார்?'' என, முன்னாள் அமைச்சர் இப்ராகிம் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொப்பாலில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி, 'முதல்வர் சித்தராமையா தான், எங்கள் தலைவர்; ராகுல் எங்கள் அல்ல' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான இப்ராகிம், நேற்று விஜயபுராவில் அளித்த பேட்டி:
சித்தராமையா முதல்வராகி ஒன்றரை ஆண்டுகளாகிறது. நாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை; ஹிஜாப் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
சில முடிவுகளை எடுப்பதில் சித்தராமையா பின்வாங்குகிறார். அவரை பின்வாங்க, அழுத்தம் கொடுக்கின்றனர்.
முஸ்லிம்களை, சித்தராமையா திருப்திபடுத்தி உள்ளதாக கூறுகின்றனர். சாவனுாரில் 50 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பாக, ஒரு எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்யப்படவில்லை.
காங்கிரஸ், பா.ஜ.,வினர் எங்களை விட்டுவிடுங்கள். உங்களின் அன்போ, அரவணைப்போ எங்களுக்கு தேவையில்லை. வெள்ளரிக்காய், தேங்காய் விற்றுப் பிழைத்துக் கொள்கிறோம். சித்தராமையா நல்லது செய்கிறார்; இல்லை என்று சொல்லவில்லை.
சித்தராமையா ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பாரா, இல்லையா என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு தான் தெரியும். நான் காங்கிரஸ் இல்லை; நான் ஏதாவது கூறினால் சர்ச்சை ஏற்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.
படம்: இப்ராகிம்

