உ.பி., பள்ளி, கல்லுாரிகளில் 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயம்: முதல்வர் யோகி அறிவிப்பு
உ.பி., பள்ளி, கல்லுாரிகளில் 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயம்: முதல்வர் யோகி அறிவிப்பு
ADDED : நவ 11, 2025 12:07 AM

கோரக்பூர்: உத்தர பிரதேச மாநில பள்ளி, கல்லுாரிகளில், 'வந்தே மாதரம்' பாடல் பாடுவது கட்டாயமாக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உ.பி.,யில் தேசிய ஒற்றுமை பேரணி இங்குள்ள கோரக்பூரில், இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவரும், நாட்டின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்த நாள் விழாவை ஒட்டி தேசிய ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், சிலர் பங்கேற்க தயங்குகின்றனர்.
ஆனால், நாட்டின் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் வெட்கமின்றி பங்கேற்கின்றனர்.
நன்றி உணர்வு சமூகத்தை மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ பிரிக்கும் காரணிகளை நாம் திறம்பட எதிர்க்க வேண்டும்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விட எதிர்காலத்தில் ஜின்னாக்கள் பிறக்கக்கூடாது. நம் நாட்டிற்குள் எந்த புதிய ஜின்னாவும் ஒருபோதும் உருவாகக்கூடாது.
மேலும், அவரது அடிச்சுவடுகளை யாராவது பின்பற்றுவது தெரிந்தால், அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு முன் அவர்களைத் தடுக்க வேண்டும்.
பிரிவினையை மறந்து, வலுவான ஒன்றுபட்ட தேசத்துக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உணர்வை, ஒவ்வொரு இந்தியருக்கும், இந்த தேசிய ஒற்றுமை யாத்திரை உணர்த்துகிறது.
இந்த சமயத்தில், இளைஞர்களிடம் தேசபக்தியை வளர்ப்பது அவசியமாகிறது. எனவே, உ.பி., மாநிலம் முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயமாக்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லுாரியும் பெருமையுடனும், நன்றி உணர்வுடனும் வந்தே மாதரத்தை பாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

