சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணியர்
சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணியர்
ADDED : ஜன 11, 2026 12:29 AM

புவனேஸ்வர்: ஒடிஷாவின் ரூர்கேலா அருகே தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பயணியர், இரண்டு விமானிகள் என மொத்தம் ஆறு பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
'இந்தியா ஒன்' என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 'வி.டி.,- கே.எஸ்.எஸ்., கேரவன் - 208' என்ற பதிவு எண் உடைய ஒன்பது பேர் அமரக்கூடிய சிறிய ரக விமானம், ஒடிஷாவின் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலாவிற்கு நான்கு பயணியருடன் நேற்று நண்பகல் 12:27க்கு புறப்பட்டது.
விமான கேப்டன்கள் நவீன், தருண் ஆகியோர் இயக்கிய இந்த விமானம், ரூர்கேலா அருகே உள்ள ரகுநாத் பாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள், விமானத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மீட்கப்பட்ட ஆறு பேரில், இரண்டு பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானிகள் திறமையாகத் தரையிறக்கியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்த விபத்து குறித்து டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, சம்பவ இடத்தில் டி.ஜி.சி.ஏ., அதிகாரிகள் இன்று விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.

