மின்சார ஸ்கூட்டர்களுக்கு 'ஸ்டார்' மதிப்பீடு வெளியீடு
மின்சார ஸ்கூட்டர்களுக்கு 'ஸ்டார்' மதிப்பீடு வெளியீடு
ADDED : ஜூன் 26, 2026 01:35 AM

புதுடில்லி: 'ஏசி, பிரிஜ்' போல், மின் இருசக்கர வாகனங்களுக்கும், ஒன்று முதல் ஐந்து ஸ்டார் வரை மதிப்பீடு வழங்க, மத்திய அரசு வரைவு வெளியிட்டுள்ளது.
மின் இரு சக்கர வாகனத்தின் பேட்டரி ஆற்றல் திறன், 100 கி.மீ., பயணத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை கண்டறிந்து, 'ஸ்டார்' மதிப்பீடு வழங்கப்படும். இந்த வகை ஸ்டார் மதிப்பீடு, ஆற்றல் நுகர்வு குறைவான மின் வாகனங்களை வாங்க, வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும். அதே சமயம், மின் நுகர்வு குறைவான இருசக்கர வாகனங்களை உருவாக்க, உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு, இத்துறை வெளிப் படைத் தன்மையுடன் செயல்பட, நல்ல வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவில் தற்போது 219 மின் இருசக்கர வாகன நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் சராசரி ஆற்றல் நுகர்வு, உலக சராசரியை விட 6 சதவீதம் அதிகமாக உள்ளது. இந்த வகை ஸ்டார் மதிப்பீடு, நாட்டின் மின் நுகர்வை குறைத்து, மின் வாகனம் வாங்குவதற்கு முக்கிய அளவுகோலாக இருக்கும் என கூறப்படுகிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு தொடர்பாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வாகனத் துறை சார்ந்த அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
