துன்பங்களை அனுபவிக்கிறேன் எம்.எல்.ஏ., ரூபகலா கண்ணீர்
துன்பங்களை அனுபவிக்கிறேன் எம்.எல்.ஏ., ரூபகலா கண்ணீர்
ADDED : அக் 18, 2024 07:37 AM

தங்கவயல்: ''பெண்ணை அவமானப்படுத்தும் சம்பவங்கள் நவீன காலத்திலும் தொடர்கிறது. சீதாதேவி, திரவுபதி அனுபவித்த துன்பங்கள் போல, சில ஊடகங்களால் நானும் அனுபவிக்கிறேன்,'' என்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கண்ணீர் விட்டு அழுதார்.
தங்கவயல் தாலுகா நிர்வாகம், நகராட்சி, பஞ்சாயத்து இணைந்து மகரிஷி வால்மீகி ஜெயந்தி விழாவை, நேற்று தங்கவயல் நகராட்சி அலுவலகத்தில் கொண்டாடினர். தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமை வகித்து பேசியதாவது:
ராமாயண இதிகாசத்தை உருவாக்கிய, மகரிஷி வால்மீகி ஜெயந்தி விழா, மாநிலம் முழுதும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ராமாயணத்தில் சீதா தேவி அனுபவித்த தொல்லைகளை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. மஹாபாரதத்தில் திரவுபதியின் துகிலுரிப்பு பலரையும் கண்ணீர் விட வைத்தது.
கவுரவம்
பெண் கொடுமைகள், இதிகாசத்தில் மட்டுமில்லை. இப்போதும் கூட இருக்கின்றன. இந்த சமுதாயத்தில் நானும் கவுரவமாக வாழ வேண்டும். சமூக சேவையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. (அப்போது கண்ணீர் விட்டு அழுதார்)
ஆனால், என்னை சில ஊடகங்கள் அவமானப்படுத்துகின்றன. அத்தகைய நபர்கள் ஒருபோதும் ஈடேற மாட்டார்கள். பல துன்பங்களை தாங்கிய சீதாதேவி, இன்றும் தெய்வமாக போற்றப்படுகிறார். ராமாயணம் தந்த வால்மீகி வரலாறு எல்லா காலத்திலும் வாழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வால்மீகி படத்திற்கு பூஜைகள், தீபாராதனை நடத்தி, தேர் ஊர்வலம் துவக்கி வைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வால்மீகி படத்தை கொண்டு வந்தனர்.
11 தேர்கள்
தங்கவயல் தாலுகா பஞ்சாயத்து சார்பில் வண்ண மலர்களால் உருவாக்கி இருந்த தேர் முன் செல்ல, தங்கவயல் நகராட்சி தேர் உட்பட 11 தேர்கள் அணிவகுத்து சென்றன. கிராமிய இசைக் கலைஞர்களின் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலம் நடந்தது.
ராபர்ட்சன்பேட்டை, பி.எம்.சாலை, சுராஜ் மல் சதுக்கம், காந்தி சதுக்கம், பிரிட்சர்ட் சாலை, சொர்ண குப்பம், கீதா சாலை, கிங் ஜார்ஜ் அரங்கம் வழியாக தேர்களின் பவனி நடந்தது.
தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார், தாலுகா பஞ்சாயத்து தலைமை அதிகாரி மஞ்சுநாத், நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, துணைத் தலைவர் ஜெர்மன் உட்பட நகராட்சி கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விழா மேடையில், கண்ணீர் விட்டு அழுத எம்.எல்.ஏ., ரூபகலா.