தேர்தல் கமிஷன் செயல்பாடுகளை எதிர்த்து திரிணமுல் காங்., சார்பில் புதிதாக மனு: பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
தேர்தல் கமிஷன் செயல்பாடுகளை எதிர்த்து திரிணமுல் காங்., சார்பில் புதிதாக மனு: பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ADDED : அக் 27, 2026 07:29 PM
–சிறப்பு நிருபர்–
தேர்தல் கமிஷன் செயல்பாடுகள் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (அக்.,27) நோட்டீஸ் பிறப்பித்தது.
நாடு முழுதும் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், மற்ற இரு தேர்தல் கமிஷனர்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.
கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி இருவரும் ஆட்சேபனை தெரிவித்தனர் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் தலைமையிலான, ‘இண்டி’ கூட்டணி மற்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை எதிர்த்து தேர்தல் கமிஷன் சார்பில் நேற்று (அக்.,26) பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘கடந்த 2025, ஜூன், அக்டோபர் மற்றும் 2026 மே மாதங்களில் எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக வெளியான அனைத்து உத்தரவுகளுமே மூன்று தேர்தல் கமிஷனர்களால் ஒருமனதாக பிறப்பிக்கப்பட்டவை’ என தெளிவுப்படுத்தி இருந்தது. புதிய வாக்காளர் சேர்ப்புக்கான ‘படிவம் –6ல் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது’ என்றும் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், திரிணமுல் காங்., – எம்.பி., டோலா சென் புதிதாக தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மேனகா குருஸ்வாமி ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், ‘‘தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. புதிய வாக்காளர்களை பதிவு செய்ய பயன்படும், ‘படிவம் – 6ல்’ இணையவழியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது,’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் குறித்து நாங்கள் ஆராய்வோம்’ என்றனர்.
இதைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், ‘‘மனுதாரரின் கருத்துகள் வேறு நோக்கத்தில் முன்வைக்கப்படுகின்றன. எனவே, இந்த வாதங்களை அனுமதிக்கக் கூடாது,’’ என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திற்கு பதில் மனு தாக்கல் செய்ய மனுதாரர்கள் கூடுதல் அவகாசம் கோரினர். இதை ஏற்ற நீதிபதிகள் 10 நாட்கள் வரை அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வரும் நவ., 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாகவும், ‘படிவம் – 6ல்’ மாற்றம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டி புதிதாக தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
