ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது சரியே ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது சரியே ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : அக் 11, 2025 12:50 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிய, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை, 5ம் தேதி அவருடைய வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ-., விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம், 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது சரியே. அதற்கு தடை விதிக்க முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-