முஸ்லிம்கள் ஆதரவை இழந்துவிட்டார் மம்தா 'சஸ்பெண்ட்' ஆன திரிணமுல் எம்.எல்.ஏ., பேச்சு
முஸ்லிம்கள் ஆதரவை இழந்துவிட்டார் மம்தா 'சஸ்பெண்ட்' ஆன திரிணமுல் எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : டிச 08, 2025 12:09 AM

கொல்கட்டா: “மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசின் முஸ்லிம் ஓட்டு வங்கி முடிவுக்கு வரும். முதல்வர் மம்தா பானர்ஜியை நான்காவது முறையாக ஆட்சிக்கு வரவிட மாட்டேன்,” என, அக்கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட எம்.எல்.ஏ., ஹுமாயூன் கபீர் சவால் விடுத்துள்ளார்.
'சஸ்பெண்ட்' மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஹுமாயூன் கபீர்.
ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த இவர், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை போல ஒரு மசூதியை, மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கட்டப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் இருந்து அவரை, 'சஸ்பெண்ட்' செய்து திரிணமுல் காங்., உத்தரவிட்டது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற பகுதியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், பாபர் மசூதியை கட்டுவதற்கான அடிக்கல்லை ஹுமாயூன் கபீர் நாட்டினார்.
இந்நிலையில், தனியார் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு, ஹுமாயூன் கபீர் அளித்த பேட்டி:
வரும் 22ல், புதுக்கட்சியை துவங்க உள்ளேன். இது, முஸ்லிம் நலன் களுக்காக பாடுபடும்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்ட சபை தொகுதிகளில், 135ல் வேட்பாளர்களை நிறுத்துவேன்.
அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், நான், 'கிங் மேக்கராக' இருப்பேன்.
திரிணமுல் காங்கிரசின் முஸ்லிம் ஓட்டு வங்கியை முடிவுக்கு கொண்டு வருவேன்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசா துதீன் ஓவைசியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பேன். மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வையும், ஆளும் திரிணமுல் காங்கிரசையும் ஆட்சிக்கு வரவிட மாட்டேன்.
முதல்வர் மம்தா பானர்ஜி முஸ்லிம்களின் ஆதரவை இழந்துவிட்டார்.
அவரை நான்காவது முறையாக ஆட்சி அமைக்க விட மாட்டேன். என்னை சாதாரணமாக எடை போட வேண்டாம்.
தேர்தலில் நிரூபிப்பேன் நான் யார்; என் பலம் என்ன என்பதை தேர்தலில் நிரூபிப்பேன்.
நாட்டில் உள்ள பல தொழிலதிபர்கள் எனக்கு உதவி செய் வர். முஸ்லிம் தலைவர்களிடம் நிறைய பணம் உள்ளது. அவர்களின் ஒத்துழைப்புடன் பாபர் மசூ தியை கட்டுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

