தமிழக காங்., - எம்.பி., சுதாவிடம் டில்லியில் தங்க செயின் பறிப்பு
தமிழக காங்., - எம்.பி., சுதாவிடம் டில்லியில் தங்க செயின் பறிப்பு
ADDED : ஆக 04, 2025 11:52 PM

டில்லியில் நடைபயிற்சி சென்ற தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதி காங்., - எம்.பி., சுதாவிடம் 4 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டில்லியில், பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக, மயிலாடுதுறை காங்., - எம்.பி., சுதா, சாணக்யபுரி பகுதியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கிறார். நேற்று காலை வழக்கம் போல சுதா நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன், தி.மு.க., ராஜ்யச பா எம்.பி., ராசாத்தியும் சென்றார்.
போலந்து துாதரகம் அருகே காலை 6:15 மணி அளவில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், சுதா கழுத்தில் அணிந்திருந்த 4 சவர தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இதில், சுதா தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாகடில்லி போலீசில், காங்., - எம்.பி., சுதா புகார் அளித்தார்.
அதன்படி வழக்குப் பதிந்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு, சுதா கடிதம் எழுதி உள்ளார்.
அதில், 'சாணக்யபுரி போன்ற உயர் பாதுகாப்பு பகுதியில், பெண் எம்.பி., மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது.
'நாட்டின் தலைநகரில் உள்ள உயர் பாதுகாப்பு பகுதியில் கூட ஒரு பெண் பாதுகாப்பாக நடக்க முடியாவிட்டால், வேறு எங்கு பாதுகாப்பாக உணர முடியும்? இந்த சம்பவத்தால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார்
- நமது டில்லி நிருபர் -.