ADDED : நவ 11, 2025 02:52 AM

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக பெரும் பங்காற்றியவர்களில் ஒருவரான கவிஞர் அந்தே ஸ்ரீ, 64, மாரடைப்பால் நேற்று காலமானார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் குடும்பத்துடன் வசித்து வந்த அந்தே ஸ்ரீ, நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அந்தே ஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்தே ஸ்ரீக்கு, இரண்டு நாட்களுக்கு முன் அதிகளவு வியர்த்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவரது இறப்புக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகித்துள்ளனர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறுகையில், 'அந்தே ஸ்ரீ, மக்களின் போராட்டங்களை வெளிப்படுத்தும் குரலாக இருந்தார்.
'அவரது வார்த்தைகள் இதயங்களைத் துாண்டும் வகையிலும், சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் இருந்தன.
'அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்' என, குறிப் பிட்டுள்ளார்.
இதேபோல் சமூக வலைதளத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், 'அந்தே ஸ்ரீயின் மறைவு, தெலுங்கானா இலக்கிய உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. இவரது இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.
அந்தே ஸ்ரீயின் இயற்பெயர் ஆண்டே எல்லையா. தெலுங்கானாவை தனி மாநிலமாக்கக்கோரி நடந்த போராட்டத்தில், தன் பாடல்களால் மாநில மக்களிடையே பெரும் எழு ச்சி யை ஏற்படுத்தினார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபின், அந்தே ஸ்ரீ எழுதிய 'ஜெய ஜெய ஹே தெலுங்கானா' என்ற பாடலை, மாநில பாடலாக அறிவித்தது.

