ADDED : நவ 27, 2024 11:07 PM

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து 22 கி.மீ., தொலைவில் சசிஹித்லு கிராமத்தில் சசிஹித்லு கடற்கரை அமைந்து உள்ளது.
கிட்டத்தட்ட 2 கி.மீ., துாரத்துக்கு கடற்கரையை அலங்கரிக்கும் வெண்மையான மணல் உள்ளது. நீலக்கடலும், வெள்ளை மணலும் ஒரு அழகிய காட்சியை உருவாக்குகின்றன. இது சூரத்கல் என்.ஐ.டி.,க்கு அருகில் உள்ளது.
கடற்கரையில் இருந்து 6 கி.மீ., துாரத்தில் 'முண்டா தீவு' அமைந்துள்ளது. இந்த தீவின் ஒரு புறம் ஷாம்பவி ஆறு, நந்தினி ஆறு; மறுபுறம் அரபிக்கடல் சூழ்ந்து உள்ளது.
விடுமுறை நாட்களை தவிர, மற்ற நேரங்களில் சுற்றுலா பயணியர் வருகை குறைவாகவே இருக்கும். இதனால் கடற்கரையும் சுத்தமாக காணப்படும்.
சசிஹித்லு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், தங்கள் படகை சரி செய்வது, மீன் வலைகளை சரி செய்யும் பணியை காணலாம். இங்கு வந்தால், அலைகளின் ஒலியை மட்டுமே உங்களால் கேட்க முடியும்.
இங்கு நீர் சாகச விளையாட்டான, 'சர்பிங்' போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் கூட கர்நாடக சர்பிங் திருவிழா நடந்தது. சர்பிங் மட்டுமின்றி, துடுப்பு படகு போட்டியும் நடப்பது குறிப்பிடத்தக்கது.
மங்களூரில் உள்ள சிறந்த கடற்கரைகளில், சசிஹித்லு கடற்கரையும் ஒன்று என்று சொல்லலாம். இந்த கடற்கரைக்கு செல்லும் வழியெங்கும் தென்னை மரங்கள் காணப்படும்.
இங்கு கடலில் அலைகள் மென்மையாகவே காணப்படும்.
- நமது நிருபர் -