வங்கதேசத்தில் ரயில் திட்டங்களை அதிரடியாக நிறுத்திய மத்திய அரசு
வங்கதேசத்தில் ரயில் திட்டங்களை அதிரடியாக நிறுத்திய மத்திய அரசு
ADDED : ஏப் 23, 2025 05:03 AM

புதுடில்லி : நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, 2024 ஆகஸ்டில், அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
இதையடுத்து அந்நாட்டில், சீன ஆதரவாளரும், நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. அப்போது முதல், ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அங்கு அதிகரித்து வருகின்றன.
சீனாவுக்கு சமீபத்தில் சென்ற முகமது யூனுஸ், அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கிடம், 'வங்கக் கடலை அணுகுவதற்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்தை தான் நம்பி இருக்கின்றன' என, தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்வேறு விவகாரங்களில் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை முகமது யூனுஸ் கடைப்பிடித்து வருகிறார். மேலும், பாகிஸ்தானுடனும் அவர் நட்பு பாராட்டி வருகிறார். இதனால் இந்தியா - வங்கதேச உறவில் விரிசல் நிலவுகிறது.
இந்நிலையில், வங்கதேசம் வழியாக நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் திட்டங்களை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இத்திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வந்தன. கட்டுமானத்தில் உள்ள அகவுரா -- அகர்தலா ரயில் இணைப்பு, குல்னா- - மோங்லா ரயில் இணைப்பு போன்ற முக்கிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், டாக்கா- - டோங்கி- - ஜாய்தேப்பூர் ரயில் விரிவாக்க திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மதிப்பு, 5,000 கோடி ரூபாய். இது தவிர, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஐந்து திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

