UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 07:44 PM

பாதையில் வெடித்த பட்டாசு
பயம் அறியாதவர்கள் அட்டகாசம்
ராஜஸ்தான் உதய்பூரில் போக்குவரத்து மிகுந்த சிர்வா சுரங்கப்பாதையில் பட்டாசு வெடித்து கொண்டியது ஒரு குடும்பம். இதற்காக, போக்குவரத்தையே சிறிது நேரம் நிறுத்தி விட்டனர். வாகனங்கள் மீண்டும் செல்லத் தொடங்கிய பிறகும், பட்டாசு வெடிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. இந்த வீடியோ வெளியான நிலையில், அந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை கோரி வலைதளவாசிகள் கொந்தளித்தனர். தண்டனை அல்லது அபராதம் குறித்த அச்சம் அவர்களுக்கு இல்லை என்று பலரும் புகார் கூறினர். ‘அவர்கள் சிறை செல்ல வேண்டியவர்கள்’ என்று சிலரும், ‘எதுவும் நடக்காது’ என்று சிலரும் கமென்ட் செய்துள்ளனர்.
ஆயிரம் உறவுகள் வந்தாலும்
அம்மா இருப்பது போலாகுமா?
ஓராண்டுக்கு பிறகு தாயை சந்தித்த சிம்ரன் கவுல் அரோராவின் வீடியோ, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஜெர்மனியில் இருந்து டில்லி வந்த மகளை சந்திக்க, அவரது தாய் ஜம்முவில் இருந்து வந்துள்ளார். ‘ஓராண்டுக்கு பிறகு உங்கள் தாயை சந்திப்பதை விட சிறந்த உணர்வு வேறொன்றும் இல்லை. ஒருவர் எவ்வளவு வயதானாலும் அல்லது எவ்வளவு தொலைவில் வாழ்ந்தாலும் தன் தாயுடன் நேரத்தை செலவிடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை’ என்கிறார், சிம்ரன். டில்லி ரயில் நிலையத்தில் தாயும், மகளும் கட்டித்தழுவிக் கொண்டு முத்தமிட்ட காட்சி, காண்பவர்களை நெகிழ வைப்பதாக உள்ளது.
அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ்?
சகோதரன், சகோதரி இடையிலான உறவை கொண்டாடும், ‘பாய் துாஜ்’ திருவிழா, வட மாநிலங்களில் நடந்தது. மும்பையில் இருந்து சென்ற சகோதரனும், சிலிகுரியில் இருந்து வந்த சகோதரியும், மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். அதே இடத்தில், பயணிகள் பலர் முன்னிலையில் சகோதரனுக்கு நெற்றியில் திலகமிட்டு நீண்ட ஆயுள் வாழ வாழ்த்தினார் சகோதரி.
வீடியோவை பகிர்ந்த வலைதளபிரியர், ‘எத்தனை நேர நெருக்கடி இருந்தாலும், அன்பு எப்போதும் ஒரு வழியை உண்டாக்கி விடும் என்பதற்கு இதுவே சான்று’ என்றார். அதே வீடியோவை பகிர்ந்த ரயில்வே நிர்வாகம், ‘ஆயிரக்கணக்கான பயணங்களுக்கு நடுவே, பாசப்பிணைப்பை கொண்டாடிய தருணம்’ என்று கூறி, வாழ்த்தியுள்ளது.
ஊர்வலத்தில் விபரீதம்
மிரண்டு ஓடிய யானை
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் சார்மினார் அருகே, இஸ்லாமியர்களின் திருவிழாவுக்காக குல்பர்காவில் இருந்து, ‘மைனகா’ என்ற யானையை அழைத்து வந்திருந்தனர். ஊர்வலத்தில் செல்வதற்காக நன்கு அலங்காரமும் செய்திருந்தனர். ஆனால், ஊர்வலத்தில் சென்றபோது கூட்டத்தினரை கண்டு மிரண்ட யானை, கட்டுக்கடங்காமல் ஓடியது. கூடியிருந்த பொதுமக்களை தாக்குவது போல் துரத்தியது. யானையின் ஆவேசம் கண்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சற்று நேரத்தில், பாகன்கள் இணைந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். யானை ஆவேசமாக துரத்திய வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
பூமாலையால் வந்த வினை
புது மணப்பெண் கண்ணீர்
வியட்நாம் திருமண ஊர்வலத்தில் கார் கவிழ்ந்து மணமக்கள் சேற்றில் விழுந்த நிகழ்வு, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட மணமக்கள் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சேற்றுழவு ஓட்டியிருந்த வயலில் பாய்ந்தது. பல முறை உருண்டு வயலில் தலைகீழாக கவிழ்ந்த காரை, உறவினர்கள் ஓடோடிச்சென்று துாக்கினர். சம்பவத்தில் மணமக்கள் காயமின்றி தப்பினர். திருமண ஆடை முற்றிலும் சேற்றில் நனைந்து விட்டதால் மணப்பெண் கண்ணீர் வடித்தார். காரில் செய்திருந்த பூமாலை அலங்காரம் டிரைவரின் பார்வையை மறைத்து விட்டதே விபத்துக்கு முக்கிய காரணம். மணப்பெண்ணை மீண்டும் அலங்கரித்து திருமணத்தை நடத்திய பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர் உறவினர்கள்.
