ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது! : உச்சநீதிமன்றம்
ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது! : உச்சநீதிமன்றம்
UPDATED : நவ 21, 2025 12:05 AM
ADDED : நவ 20, 2025 11:37 PM

'சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வழக்கில் ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது; அதே சமயம், 'மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2023ம் ஆண்டு தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்ததாக தி.மு.க., அரசு குற்றஞ்சாட்டியது.
இதனால், கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, 'தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் மீது ஒரு மாதத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும்.
'ஒருவேளை மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி இருந்தால், அதன் மீது மூன்று மாதத்திற்குள் அவர் முடிவெடுக்க வேண்டும்' என தீர்ப்பளித்தது.
மேலும், தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரம், 142ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, அந்த மசோதாக்கள் சட்டமான நிலையில், அரசிதழில் வெளியானது. இந்த விவகாரம், அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு தரப்பில் 14 கேள்விகள் எழுப்பப்பட்டு, அவை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஜனாதிபதியின் 14 கேள்விகளையும் வழக்காக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 10 நாட்களுக்கு தொடர்ந்து விரிவாக விசாரணை நடத்தியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம்நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துார்கர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
அதில், 'மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு, நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியாது. மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்தால், அதன் மீது முடிவு எடுக்கச் சொல்லி நீதிமன்றத்தால் பரிந்துரைக்க மட்டுமே முடியும்' என திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கு, நீதிபதிகள் அளித்த பதில்:
1. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், ஒரு மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியலமைப்பில் அவருக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
பதில்: அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தல், பரிசீலனைக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தல், ஒப்புதல் வழங்காமல் அதற்குரிய காரணங்களுடன் மசோதாவை சட்டசபைக்கு மீண்டும் திருப்பி அனுப்புதல் என மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன. நான்காவது வாய்ப்பு ஏதும் இல்லை.
மாறாக மூன்றில் ஒரு வாய்ப்பில் கட்டுப்பாடு இருக்கிறது. அதாவது, மூன்றாவது வாய்ப்பான மசோதாவை திருப்பி அனுப்பும் போதும் அந்த கட்டுப்பாடு பயன்படுகிறது. அந்த வகையில், பண மசோதா அல்லாத மசோதாக்களை மட்டுமே ஒப்புதல் தராமல் கவர்னர் திருப்பி அனுப்ப முடியும்.
2. அரசியலமைப்பு சட்டம் 200வது பிரிவின் கீழ் மசோதா சமர்ப்பிக்கப்படும் போது, கவர்னர் தனக்கான வாய்ப்புகளை பயன்படுத்த அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையை கேட்டு பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறதா?
பதில்: அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், ஏற்கனவே சொல்லப்பட்ட அந்த மூன்று வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கவர்னரின் தனி உரிமை. எனவே, மாநில அமைச்சரவையின் உதவியையோ, ஆலோசனையையோ அவர் பெற வேண்டிய கட்டாயம் இல்லை. தவிர, கவர்னர் அதற்கு கட்டுப்பட்டவரும் அல்ல.
3. கவர்னரின் தனி உரிமை, நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதா?
பதில்: அது, நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல. எனினும், ஒரு மசோதா மீது முடிவெடுக்காமல் நீண்ட காலத்திற்கு கிடப்பில் போட்டு வைத்தால், காரணமின்றி நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், கடமையை செய்யும்படி வரையறுக்கப்பட்ட ஒரு உத்தரவை கவர்னருக்கு பிறப்பிக்க முடியும்.
4. அரசியலமைப்பு சட்டத்தின் 361வது பிரிவு, 200வது பிரிவு, கவர்னரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு தடையாக உள்ளதா?
பதில்: கவர்னரின் செயல்பாடுகளை நீதிமன்றம் ஆய்வு செய்வதற்கு, 361வது பிரிவு முற்றிலும் தடை விதிக்கிறது. ஆனால், 200வது பிரிவின் கீழ் கவர்னர் நீண்ட காலத்திற்கு செயலற்ற தன்மையில் இருந்தால், அதை ஆய்வுக்கு உட்படுத்த வழி வகை செய்கிறது. நீதித்துறை மறுஆய்வின் வரையறுக்கப்பட்ட வரம்பை மறுக்க, இந்த தடையை பயன்படுத்த முடியாது. கவர்னர் தனிப்பட்ட விலக்குரிமையை பெற்றிருந்தாலும், கவர்னரின் அலுவலகம் இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
5. அரசியலமைப்பு சட்டத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் அதை நிர்ணயிக்க முடியுமா?
பதில்: கவர்னருக்கு காலக்கெடு விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் தரப்படவில்லை.
6. அரசியல் சட்டத்தின் 201வது பிரிவின்படி, ஜனாதிபதியின் தனி உரிமை, நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதா?
பதில்: ஜனாதிபதி மற்றும் கவர்னரின் தனி உரிமை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நீதிமன்றங்களால் வரையறுக்க முடியாது. அதே போல், 201வது பிரிவின் கீழ் ஜனாதிபதியின் தனி உரிமை, நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல.
7. அரசியலமைப்பு சட்டத்தில் காலக்கெடு மற்றும் அதிகார பயன்பாட்டு முறை குறிப்பிடப்படாத நிலையில், 201வது பிரிவின் கீழ் ஜனாதிபதியின் தனி உரிமை பயன்பாட்டுக்கு, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
பதில்: அரசியலமைப்பு சட்டம் 200வது பிரிவில் கூறப்பட்ட அதே காரணங்களுக்காக, 201வது பிரிவின் கீழ் ஜனாதிபதியின் தனி உரிமை பயன்பாட்டுக்கு, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது; நீதிமன்ற உத்தரவுகள் வாயிலாக கட்டுப்படுத்தவும் முடியாது.
8. ஜனாதிபதியின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்பு சட்ட பிரிவுகளின்படி, கவர்னர் ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போது, ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பான அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் குறித்து, 143வது சட்ட பிரிவின்படி உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி ஆலோசனை கேட்க வேண்டுமா?
பதில்: நம் அரசியலமைப்பு சட்டத்தில் கவர்னர் ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும்போது, ஒவ்வொரு முறையும், 143வது பிரிவின் கீழ், ஜனாதிபதி நீதிமன்றத்தின் ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை மசோதா தொடர்பாக சட்ட ஆலோசனைகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி நீதிமன்றத்தை அணுகலாம். கடந்த காலங்களில் அவ்வாறு நடந்து இருக்கிறது.
9. மசோதா சட்டமாக மாறுவதற்கு முந்தைய நிலையில், 200 மற்றும் 201வது பிரிவுகளின் கீழ் கவர்னர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள், நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவையா?
பதில்: அரசியலமைப்பு சட்டத்தின் 200, 201வது பிரிவுகளின் கீழ் கவர்னர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் எடுக்கும் முடிவுகள், சட்டமாக மாறுவதற்கு முன், நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை அல்ல. சட்டமாக மாறுவதற்கு முன், மசோதாவின் உள்ளடக்கத்தின் மீது எந்த வகையிலும் ஆய்வுகள் மேற்கொள்ள நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. குறிப்பாக, 143வது பிரிவின் கீழ் மசோதாக்களை, நீதிமன்றங்கள் ஆய்வு செய்யவே முடியாது.
10. அரசியலமைப்பு சட்டம் 142வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அல்லது கவர்னரின் அரசியலமைப்பு அதிகாரங்கள், உத்தரவுகளை மாற்ற முடியுமா?
பதில்: எந்த வகையிலும் ஜனாதிபதி அல்லது கவர்னரின் அரசியலமைப்பு அதிகாரங்கள், உத்தரவுகளை மாற்ற முடியாது.
11. அரசியலமைப்பு சட்டம் 200வது பிரிவின் கீழ் கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், மாநில சட்டசபையில் சட்டம் நிறைவேற்றி, அதை நடைமுறைக்கு கொண்டு வர முடியுமா?
பதில்: அரசியலமைப்பு சட்டம் 200வது பிரிவின் கீழ், கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. கவர்னரின் சட்டம் இயற்றும் பணியை, வேறு எந்த அரசியலமைப்பு அதிகாரமும் மாற்றம் செய்ய முடியாது.
12. உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு முன் வந்துள்ள வழக்கில், அரசியலமைப்பு சட்டத்தின் 145 (3)ன் படி, அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பல விதமான கேள்விகள் எழும்போது, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கட்டாயமா?
பதில்: 145(3) பிரிவின் அரசியலமைப்பு முக்கியத்துவம் குறித்து இந்த அமர்வு ஏற்கனவே விளக்கத்தை தெளிவாக கொடுத்து விட்டது. எனவே, இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் திருப்பி அனுப்புகிறோம்.
13. அரசியலமைப்பு சட்டத்தின், 142வது பிரிவின் படி, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள், செயல்முறை சட்டத்திற்கு மட்டும் உட்பட்டவையா அல்லது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாகவோ, மாறாகவோ உத்தரவுகள் / வழிகாட்டுதல்கள் பிறப்பிக்க வழி செய்கிறதா?
பதில்: உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் குறித்து உறுதியான பதில் வழங்குவது சாத்தியம் அல்ல என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். கவர்னர் மற்றும் ஜனாதிபதி பணிகள் குறித்து, 142வது பிரிவில் உள்ள அம்சங்கள், அது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியின் ஒரு பகுதியாகவே இதற்கான பதிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
14. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான பிரச்னைகளை தீர்ப்பதற்கு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 131ன் கீழ் செயல்படுவதை தவிர, வேறு ஏதேனும் வகையில் செயல்பட தடை இருக்கிறதா?
பதில்: நீதிமன்றத்திடம் கேட்கும் சந்தேகங்களுக்கு தொடர்பு இல்லாததாக இந்த கேள்வி இருக்கிறது. எனவே, இதற்கு பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -

