மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., அமலாகிறது வரும் 22ம் தேதி முதல்!
மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., அமலாகிறது வரும் 22ம் தேதி முதல்!
UPDATED : செப் 04, 2025 12:17 AM
ADDED : செப் 03, 2025 11:56 PM

புதுடில்லி : டில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது.இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்த கவுன்சில் கூட்டம் ஒரே நாளில் முடிவடைந்தது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்ததாக கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் வெறும் வரி விகித குறைப்பு மட்டும் கிடையாது; வணிகம் செய்வதையும், மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது. பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கடுமையாக ஆராயப்பட்டு பெரும்பாலான பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அதிக பணியார்களைக் கொண்ட துறைகளுக்கு வலுவான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.இந்த முடிவால், விவசாயிகளும், விவாசயத் துறையும் பயன்பெறுவர். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக, காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., பதிவு செய்வது, தாக்கல் செய்வது, ரீபண்டு பெறுவது உள்ளிட்டவை எளிதாக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வரி குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை. தற்போதைய சூழலில், வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இழப்பீடு செஸ் தொடரும். இதனால், புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்களுக்கு தொடர்ந்து 28 சதவீத வரியும் கூடுதலாக இழப்பீடு செஸ் வசூலிக்கப்படும்.புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கான 40 சதவீத வரி விதிப்பு அமலாகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பொதுமக்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர பிரிவினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும். இந்த முடிவு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, சிறிய வர்த்தகர்கள் மற்றும் வணிகங்களுக்கு, வணிகம் செய்வதை எளிதாக்கும்.- நரேந்திர மோடி, பிரதமர்