தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/துவக்கம்?

துவக்கம்?

துவக்கம்?


UPDATED : நவ 15, 2026 07:35 PM

ADDED : நவ 15, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 07:35 PM ADDED : நவ 15, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவை பெறும் நடவடிக்கையில் மூத்த மத்திய அமைச்சர்கள் களமிறங்கி உள்ளனர்.

வழக்கமாக, நவ., இறுதி வாரத்தில் அல்லது டிச., முதல் வாரத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கும். கடந்த ஜூலை – ஆகஸ்டில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரே இதுவரை முடித்து வைக்கப்படாத நிலையில், குளிர் கால கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகுமா அல்லது குளிர் கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகுமா அல்லது பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என, எதிர்க்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளன.

இந்நிலையில், டிச., முதல் வாரத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே அமர்வாக மூன்று வாரங்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

கடந்த ஏப்., 17ல் நடந்த பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில், போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதாவை, வரவிருக்கும் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது மத்திய அரசுக்கு சவாலாக பார்க்கப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறையை முன்னெடுக்க, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதற்கு மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு தேவை.

மொத்தம், 543 எம்.பி.,க்களை உடைய லோக்சபாவில், மூன்று இடங்கள் காலியாக உள்ள நிலையில், 540 எம்.பி.,க்களில், 361 ஓட்டுகள் தேவை. ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 320 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளதால், மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது.

எனினும், இந்த முறை சில எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்றி விடுவோம் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. இதற்காக சில எதிர்க்கட்சிகளுடன் மூத்த மத்திய அமைச்சர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். ஓட்டெடுப்பின் போது ஒருசில எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொகுதி மறுவரையறையால் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சத்தை போக்க, அனைத்து மாநிலங்களிலும் லோக்சபா தொகுதிகளை சமமாக, 50 சதவீதம் உயர்த்தவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அதே சமயம், இந்த கூட்டத்தொடரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறப்படும் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப, காங்., சமாஜ்வாதி, திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதனால், கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us