ADDED : ஜன 13, 2026 04:41 AM

சபரிமலை: பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி நேற்று மதியம் புறப்பட்டது. மகரஜோதிக்கு முன்னோடியாக சன்னிதானத்தில் சுத்திகிரியைகள் நேற்று மாலை தொடங்கியது.
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நாளில் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படுகிறது. சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பனை காண பந்தள மன்னர் வரும்போது ஏராளமான நகைகள் கொண்டு வந்ததை நினைவு கூரும் வகையில் இந்த திருவாபரண பவனி நடைபெறுகிறது.
ஐயப்பன் விக்ரகத்தில் இந்திர நிலை கல் பதித்த திருமுகம், நவரத்தின மோதிரம், மாலைகள், சூரி, வாள், சொர்ணத் தளிகா, பிரபா மண்டலம், யானை, புலி உருவங்கள், பூரண புஷ்கலா ஆகியவை திருவாபரண முதல் பெட்டியில் இருக்கும்.
இரண்டாவது பெட்டியில் களபாபிசேகத்துக்கு தேவையான தங்க குடம், வெள்ளி கட்டிய சங்கு, பூஜை பாத்திரங்கள் இருக்கும். மூன்றாவது பெட்டியில் ஜீவதம், நெற்றி பட்டம், தலப்பார, உடும்பாரா மலைகளின் கொடிகள் இருக்கும்.
நேற்று அதிகாலை 5:00 மணி முதல் பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்ட திருவாபரணங்களை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
மதியம் 12:30 மணிக்கு பின்னர் திருவாபரண பவனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.
பெட்டிகள் அடைக்கப்பட்டு கோயிலில் உச்ச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் பந்தளம் ராஜ பிரதிநிதி நாராயண வர்மாவிடம் உடைவாள் வழங்கப்பட்டதும், திருவாபரண பெட்டிகள் கங்காதரன் குருசாமி குழுவினரின் தலையில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோயிலில் இருந்து திருவாபரண பெட்டிகள் வெளியே வந்த போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. இதைக் கண்ட பக்தர்களின் சரண கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. தொடர்ந்து திருவாபரண பவனி புறப்பட்டது.
நேற்று அயிரூர் புதிய காவு கோயிலில் தங்கிய பவனி இன்று ளாகா வனத்துறை சத்திரத்தில் தங்கும். நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு பிலாப்பள்ளி, அட்டத்தோடு, வலியானவட்டம், சிறியான வட்டம், நீலிமலை வழியாக சரங்குத்திக்கு மாலை 5:30 மணிக்கு வந்தடையும்.
மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை முடிந்த சில வினாடிகளில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி மூன்று முறை காட்சி தரும். இதை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் சன்னிதானத்தில் கூடியுள்ளனர்.
மகரஜோதி பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்தி கிரியைகள் நேற்று சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று மாலையில் தந்திரி மகேஷ் மோகனரரு பிரசாத சுத்திகிரியை பூஜைகளை நடத்தினார். இன்று மதியம் உச்ச பூஜைக்கு முன்னால் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.
பம்பையில் இன்று மதியம் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்கள் மற்றும் அங்கு குழுமியுள்ள பக்தர்களின் பம்பை விருந்தும், அதைத்தொடர்ந்து மாலையில் பம்பை நதியில் பம்பை விளக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மகரஜோதிக்கு முன்னோடியாக நாளை மதியம் 3:08 மணிக்கு மகர சங்கரம அபிஷேகம் நடைபெறும். இதற்காக மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்படும் நடை 2:45 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

