116 பேருடன் வந்த அமெரிக்க விமானம்: கை, கால்கள் கட்டப்பட்டதாக புகார்
116 பேருடன் வந்த அமெரிக்க விமானம்: கை, கால்கள் கட்டப்பட்டதாக புகார்
ADDED : பிப் 16, 2025 11:19 PM

சண்டிகர்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, 116 பேருடன், அந்நாட்டின் 'சி - 17' ராணுவ விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு பஞ்சாபின் அமிர்தசரசை வந்தடைந்தது.
தங்களின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டதாகவும், கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டதாகவும், அதில் வந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், இரண்டாம் கட்டமாக, 116 பேருடன், அந்நாட்டின் சி - 17 ராணுவ விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு பஞ்சாபின் அமிர்தசரசை வந்தடைந்தது.
இவர்களில், 65 பேர் பஞ்சாப்; 33 பேர் ஹரியானா; எட்டு பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். தலா இருவர், உ.பி., கோவா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். தலா ஒருவர், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
உரிய சட்ட விதிமுறைகளுக்குப் பின், இவர்கள் அனைவரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். பஞ்சாபைச் சேர்ந்த தல்ஜித் சிங் என்பவர் கூறுகையில், ''எங்களின் கால்களை அமெரிக்க ராணுவத்தினர் சங்கிலியால் கட்டினர். கைகளில் விலங்கு மாட்டினர். கடல், மலை, காடு என, பயண அனுபவமும் மோசமாக இருந்தது,'' என்றார்.
இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து மூன்றாம் கட்டமாக, 157 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம், விரைவில் அமிர்தசரசுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து வந்தவர்களில், சந்தீப் சிங், பிரதீப் சிங் ஆகியோர், 2023ல் பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் பதிவான கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்.
கொலை செய்து விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடி தலைமறைவாக இருந்தனர். நேற்று அமிர்தசரஸ் வந்திறங்கியதும், இவர்கள் இருவரையும் பஞ்சாப் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

