தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வலை வளை: நவ. 21

வலை வளை: நவ. 21

வலை வளை: நவ. 21


UPDATED : நவ 20, 2026 09:52 PM

ADDED : நவ 20, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 09:52 PM ADDED : நவ 20, 2026 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாப்பிள்ளையின் சிக்கனம்

மாமனாருக்கு செலவு மிச்சம்

கார், யானை, குதிரை, சாரட் வண்டிகளில் மணமக்கள் வந்திறங்கியது அந்தக்காலம். ஹெலிகாப்டரில் வந்திறங்குவது தான் இப்போது டிரெண்டிங். அதை ஒதுக்கித்தள்ளி, வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறார், மஹாராஷ்டிராவின் அகோலாவைச் சேர்ந்த புது மாப்பிள்ளை டாக்டர் விராஜ். அவரும், உறவினர்கள் 100 பேரும் நகரின் பிரதான சாலைகளில் அலங்கரிக்கப்பட்ட சைக்கிள்களில் திருமண ஊர்வலம் சென்றனர். 'அன்புக்கான பயணம்' என்ற பெயரிலான ஊர்வலத்தை கண்ட பலரும் பாராட்டினர். 'சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வாய்ப்பாக திருமணத்தை பயன்படுத்தினேன். சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் தந்தையின் வழியில் இதை செய்தேன்' என்கிறார், மாப்பிள்ளை விராஜ். 'மாமனாருக்கு செலவு மிச்சம்' என, கமென்ட் செய்கின்றனர், வலைதளவாசிகள்.

ஜெர்மனியின் கலாசாரம்

இந்திய பெண் ஆச்சரியம்

ஜெர்மனியில் பணியாற்றும் நம் நாட்டைச் சேர்ந்த பெண் சானா ஷேக், வேலை நேரம் முடிந்த, 10 நிமிடத்தில் மொத்த அலுவலகமும் காலியாக இருப்பதை படம் பிடித்துக் காட்டினார். அவர் கூறுகையில், 'ஜெர்மானியர்கள், அலுவலக நேரம் முடிந்ததும் உடனடியாக வீட்டுக்கு கிளம்பி விடுவர். தனிப்பட்ட நேரத்துக்கு மிகவும் மதிப்பு தருவது அவர்கள் வழக்கம். இந்தியாவில் யாரேனும் மாலை, 5:00 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டால், அவர்கள் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டதாக மற்றவர்கள் நினைத்துக் கொள்வர்' என்கிறார், சானா. வீடியோவை பார்த்த வலைதள பிரியர்கள், 'ஐரோப்பிய நாடுகளின் வேலை கலாசாரம் அப்படித்தான்' என்கின்றனர்.

எருமை வாகனத்தில்

இந்திய 'பேட்மேன்' உலா

கடந்த 1999ல், மாதுரி தீட்சித் நடிப்பில் வெளியான, ஆர்ஸூ படத்தின், 'சாஜன் சாஜன்' பாடல் பின்னணியில் ஒலிக்க, 'ஏ.ஐ.,'யில் உருவாக்கப்பட்ட புதிய, 'பேட்மேன்' வீடியோக்கள், வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த, 'பேட்மேன்' ஹாலிவுட்காரர் அல்ல; இவர், முற்றிலும் இந்திய பேட்மேன். பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் சூழலை காட்சியாக அமைத்துள்ளனர். எருமை மாட்டிலும், சைக்கிளிலும் சென்று ஜோக்கரை துரத்துகிறார் இந்த பேட்மேன். பலப்பல கதைகளுடன் வீடியோ இருக்கிறது; ஆனால், ஒரே பாடலை எல்லாரும் பயன்படுத்தி உள்ளனர். இப்படி, 'சாஜன் சாஜன்' பாடல் டிரெண்டிங் ஆனதை கண்ட அமேசான் மியூசிக், 'பேட்மேனுக்கு கூட ஒரு விளம்பரப்பாடல் தேவைப்படுகிறது' எனக் கூறி, அந்த ஹிந்தி பாடலை மீண்டும் வெளியிட்டுள்ளது.

7 மாதம்; ரூ.82 லட்சம்

சாராவுக்கு கொண்டாட்டம்

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் சாரா ஆன். நர்ஸாக வேலை பார்த்தவருக்கு, சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டால் நல்ல வருமானம்; அலைச்சல் குறைவு என, தோன்றியது. வேலையை விட்டவர், வீடியோ வெளியிட ஆரம்பித்தார். வலைதளவாசிகள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். 'இந்தாண்டு மே முதல் நவ., வரையிலான ஏழு மாதங்களில், 1.75 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினேன். ஏஜன்சிக்கான தொகை, அரசுக்கான வரி போக, எனக்கு, 82 லட்சம் ரூபாய் கிடைத்தது' என்கிறார். 'ஏழு மாதங்களில் சம்பாதித்த தொகையானது, ஓராண்டு முழுவதும் நர்ஸாக பணியாற்றி சம்பாதித்த தொகையை காட்டிலும் அதிகம்' என்ற சாராவின் பதிவு, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

கதா காலட்சேபம்

காண வந்தது 'நகைக்கடை'

பீஹாரைச் சேர்ந்தவர் பிரேம் குமார் சிங், உ.பி., பிரதாப்கர் மாவட்டத்தில் நடந்த ஸ்ரீ ராமபிரான் கதா காலட்சேபத்துக்கு வந்திருந்தார். விதம் விதமான தங்கச்சங்கிலிகள், பிரேஸ்லெட் உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்த அவர், நடமாடும் நகைக்கடை போல காட்சியளித்தார். 'பீஹாரின் தங்க மனிதர்' என்ற அடைமொழி கொண்ட பிரேம்குமார், 6.3 கிலோ எடையும், 10 கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட நகைகளை அணிந்திருந்தார். கதா காலட்சேபம் காண வந்த அனைவரும், பிரேம்குமாரின் நகைகளை பார்த்து ஆச்சரியம் அடைந்து அவருடன், 'செல்பி' எடுத்தனர்.

'தாதா' பெயரில்

ஜாக்கெட் விற்பனை

கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பிரபல 'தாதா' லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசில் பிடிபட்டபோது, அவர் அணிந்திருந்தது போன்ற ஜாக்கெட்டுகள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமோகமாக விற்பனையாகின்றன. 'கருப்பு, ஆரஞ்சு வண்ணம் கொண்ட இந்த ஜாக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன; மீண்டும் ஸ்டாக் வரவழைத்து இருக்கிறோம்' என்று வியாபாரி கூறும் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us