நெல்லையில் தலைமுறைகளை கடந்து மின்னும் பாரம்பரிய உணவகம்!
நெல்லையில் தலைமுறைகளை கடந்து மின்னும் பாரம்பரிய உணவகம்!
PUBLISHED ON : அக் 01, 2026 12:31 AM

திருநெல்வேலி டவுனில், 'மனோகரா' என்ற அசைவ உணவகத்தை நடத்தி வரும் உரிமையாளர்களான ம.ராஜா மற்றும் மோ.ரவிராஜா:
* ம.ராஜா: எங்கள் தாத்தா துரைபாண்டி தான் இந்த உணவகத்தை ஆரம்பித்தார். பாரம்பரியமான அந்த உணவகத்தை, இன்று அவரின் வாரிசுகளான நாங்கள் எடுத்து நடத்தி வருகிறோம். அன்று வந்த வாடிக்கையாளர்கள் இன்றும் வருகின்றனர்.
ஆரம்பத்தில் இந்த டவுன் பகுதியில் எல்லா பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதின்னு வியாபாரம் மும்முரமாக நடக்கும். அப்படிப்பட்ட நெரிசலான முடுக்கு தெருவாக இருந்தாலும், சுவை மாறாமல், கூட்டம் குறையாமல் கம்பீரமாக இயங்கி வருகிறது எங்கள் உணவகம்.
மக்கள் தேடி வந்து சாப்பிட்டு செல்வர். காரணம், எங்கள் சாப்பாட்டின் ருசியும், நாங்கள் நடந்து கொள்ளும் விதமும் தான். பொருட்களை ஏற்றி, இறக்க லாரிகள் நிறைய வரும். மிகவும் கஷ்டமான வேலை. அந்த வேலையை முடித்து விட்டு ஓட்டுநர்களும், தொழிலாளர்களும் எங்கள் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்வர். வயிறும் நிறையும்; சுவையால் மனதும் நிறையும்.
* மோ.ரவிராஜா: நெல்லையில் சுவையான சோறும், மட்டன் குழம்பும் சாப்பிடணும் எனில், இங்கு தான் வரணும்னு சொல்வர். முன்பு எப்போதுமே கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் உட்கார்ந்து சாப்பிட இடம் இருக்காது. 'டோக்கன்' வாங்கிக் கொண்டு வெளியில் காத்திருப்பர்.
இப்போது இருக்கும் தலைமுறைக்கு அதெல்லாம் தெரியாது. அப்படி இருந்தும் அவர்கள் அப்பா, தாத்தா வாயிலாக தெரிந்து வருகின்றனர். அப்படி ஒருமுறை வந்துவிட்டால், அதன்பின் அவர்களுக்கு இது மிகவும் பிடித்த உணவகமாக மாறிவிடும். இப்போது பலரும் காணொளிகள் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதை பார்த்து பலரும் சாப்பிட வருகின்றனர்.
மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இந்த உணவகத்தை பார்ப்பது எங்களின் பாக்கியம். இன்னும் மூன்று தலைமுறைகள் ஆனாலும், எங்கள் உணவகம் சுவையான உணவையும், நல்ல அனுபவங்களையும் மக்களுக்கு கொடுக்கும். அதற்காக நாங்கள் இன்னும் கூடுதலாக உழைப்போம்.
***
