ADDED : ஜன 20, 2024 01:31 AM
வதோதரா, குஜராத் மாநிலம் வதோதராவில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், புறநகர் பகுதியில் உள்ள ஹர்னி ஏரிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர்.
அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்தபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் இருந்த 34 பேரும் தண்ணீரில் மூழ்கினர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரின் தீவிர முயற்சியால் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின், 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். நீரில் மூழ்கிய 12 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
அதிக பாரம் காரணமாகவே படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதும், அதில் பயணித்த யாருக்கும் 'லைப் ஜாக்கெட்' எனப்படும் பாதுகாப்பு உடை வழங்காததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, படகு ஓட்டுனர்கள் உட்பட 18 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் வதோதரா கலெக்டருக்கு மாநில அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக, ஏரியை பொழுதுபோக்கு மண்டலமாக பராமரித்து வரும் தனியார் அமைப்பின் திட்ட மேலாளர் சாந்திலால் சோலாங்கி மற்றும் படகு ஓட்டுனர்கள் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அலட்சியம் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதால் கைது எண்ணிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.