ADDED : பிப் 02, 2025 06:02 AM

புதுடில்லி: வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஈரானுக்கு சென்ற மூன்று இந்தியர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி டில்லியில் உள்ள ஈரான் துாதரகத்துக்கு வெளியுறவுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து மூன்று வர்த்தகர்கள் தொழில் விஷயமாக மேற்காசிய நாடான ஈரானுக்கு கடந்த டிசம்பர் மாதம் சென்றனர். ஈரான் சென்றடைந்த நிலையில் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று, அவர்களது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
மாயமான மூன்று இந்தியர்கள் குடும்பத்தினருடன், வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மாயமான மூவரையும் தேடி கண்டுபிடிக்க டில்லியில் உள்ள ஈரானிய துாதரகம் மற்றும் டெஹ்ரானில் உள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஈரானிய அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.