பயணங்களின் தலைவர் ராகுல் பா.ஜ., செய்தி தொடர்பாளர் கிண்டல்
பயணங்களின் தலைவர் ராகுல் பா.ஜ., செய்தி தொடர்பாளர் கிண்டல்
ADDED : டிச 11, 2025 12:24 AM

புதுடில்லி: காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படும் நிலையில், 'ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அல்ல; பயணங்களின் தலைவர்' என, பா.ஜ., கிண்டலடித்துள்ளது.
பார்லி., குளிர் கால கூ ட்டத்தொடர், கடந்த 1ல் துவங்கிய நிலையில், வரும் 19 வரை நடக்கிறது. வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, ஆளும் கூட்டணி - எதிர்க்கட்சி கூட்டணி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கின்றன.
இந்த சூழலில், வரும் 15 - 20 வரை, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு ராகுல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவருடன், காங்., வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவும் செல்கிறார். ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ள ராகுல், ஜெர்மனி அரசின் அமைச்சர்களையும் சந்திக்கிறார்.
குளிர் கால கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், ராகுல் வெளிநாடு செல்வது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தன் பணியை மீண்டும் சிறப்பாக செய்கிறார். வரும் 19 வரை குளிர் கால கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அவரை எதிர்க்கட்சி தலைவர் என அழைப்பதற்கு பதில், பயணங்களின் தலைவர் என, அழைப்பதே சிறந்ததாக இருக்கும்.
பீஹார் சட்டசபை தேர்தலின் போதும் வெளிநாட்டில் ராகுல் இருந்தார். முக்கியமான அரசியல் தருணங்களில் காணாமல் போய் விடுகிறார். பொறுப்பை தட்டிக்கழிப்பதில் அவரை யாரும் வெல்ல முடியாது.
தேர்தலில் தோற்றால், நாங்கள் ஏன் தோற்கிறோம் என, கேள்வி மட்டும் கேட்பார். வெளிநாடுகளுக்கு எப்போது சுற்றுப்பயணம் செல்லலாம் என்பதே அவரது சிந்தனையாக இருக்கிறது; மக்கள் நலன் பற்றி அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

