நிதி முடக்கத்தால் முடங்கிய அரசு துறை; கையெழுத்திட்டு முடித்து வைத்த டிரம்ப்
நிதி முடக்கத்தால் முடங்கிய அரசு துறை; கையெழுத்திட்டு முடித்து வைத்த டிரம்ப்
ADDED : நவ 14, 2025 01:56 AM

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ந்த, 43 நாள் அரசு பணி முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாக்களில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் சுகாதார பாதுகாப்பு சட்டம் தொடர்பான சுகாதார மானியங்களை பட்ஜெட்டில் நீட்டிப்பது குறித்து ஜனநாயக கட்சியினருக்கும், குடியரசு கட்சியினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நிதி மசோதாக்களை பெரும்பான்மையுடன் நிறைவேற்ற இயலவில்லை.
ஸ்தம்பிப்பு இதனால், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல், இம்மாதம் 12ம் தேதி வரையிலான 43 நாட்கள் நிதியின்றி அரசு பணிகள் முடங்கின. இதனால், பல்வேறு அத்தியாவசிய அரசு பணிகள் ஸ்தம்பித்தன.
இரு தரப்பும் தொடர்ந்து தங்கள் முடிவுகளில் உறுதியாக இருந்ததால், விமான போக்குவரத்து, உணவு உதவி திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. தேசிய பூங்காக்கள் மூடப்பட்டன. நாட்டின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்ட இந்த இடையூறுகள், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின.
இதையடுத்து, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினர், தங்கள் கட்சி தலைமைக்கு எதிராக, இந்த முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, குடியரசு கட்சியினருடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்படி, சுகாதார மானியங்களை நீட்டிப்பது குறித்த வாக்குறுதியோ இன்றி, அரசுக்கு வருகிற 2026 ஜனவரி 30 வரை நிதியளிக்கும் மசோதாவை ஆதரிப்பது என ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, செனட்டில் இம்மசோதா நிறைவேறியது.
இதை தொடர்ந்து, குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பார்லிமென்டிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டால் மட்டுமே அது நடைமுறைப்படுத்தப்படும்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அதிபர் டிரம்ப் அம்மசோதாக்களில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, 43 நாட்கள் நிதியின்றி முடங்கிக் கிடந்த அரசு பணிகள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பின .
உத்தரவாதம் மேலும், இரு தரப்பிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, டிரம்ப் நிர்வாகத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்ட அரசு ஊழியர்களை திரும்ப வேலைக்கு அமர்த்தவும், முடக்கப்பட்ட ஊழியர்களுக்கு பிடிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சமரச ஒப்பந்தத்தின்படி, குடியரசு கட்சியின் செனட் தலைவர், டிசம்பர் மத்திக்குள், சுகாதார மானியம் நீட்டிப்பு குறித்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.

