திருமணத்தில் துப்பாக்கி சூடு; உ.பி.,யில் இரு சிறுவர்கள் பலி
திருமணத்தில் துப்பாக்கி சூடு; உ.பி.,யில் இரு சிறுவர்கள் பலி
UPDATED : டிச 08, 2025 07:38 AM
ADDED : டிச 08, 2025 12:10 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தின் எட்டாவா பகுதியில் நடந்த திருமண நிகழ்வில், துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது குண்டு பாய்ந்து இரு சிறுவர்கள் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத் நகரில், நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. அதில் பாடல் ஒலிபரப்பப்பட்டு உறவினர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடினர்.
அப்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருவர் சுட்டுள்ளார். அது குறிதவறி அங்கிருந்த ஆசாதின் என்பவரின் மகன் சுஹைல், 12, மற்றும் முன்னா கான் என்பவரின் மகன் சாக்ஹாத், 17, ஆகியோர் மீது பாய்ந்தது.
இதையடுத்து இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் சுஹைல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சாக்ஹாத், மேல் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்க ப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
தகவல் அறிந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கூடுதல் எஸ்.பி., பாண்டே, “விசாரணைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது தெரியவரும்,” என்றார்.

