ஹைதராபாத்தில் பர்னிச்சர் கடையில் பயங்கரத் தீ; இரு குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
ஹைதராபாத்தில் பர்னிச்சர் கடையில் பயங்கரத் தீ; இரு குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
ADDED : ஜன 25, 2026 07:24 PM

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இரு குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
நம்பள்ளி பகுதியில் உள்ள 4 மாடி கட்டடத்தில் செயல்பட்டு வந்த பர்னிச்சர் கடையில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது. இதில், இரு குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
பேபி,45, அகில்,11, பிரனீத், 8, இம்தியாஸ், 28, மற்றும் கடை வாகன ஓட்டுநர் ஹபீப், 32, ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றுமொரு நபரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கட்டடத்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர். வாகன நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்ட அடித்தளப் பகுதியில், மரச்சாமான்கள், ரெக்சின் பொருட்கள் மற்றும் சில வேதிப்பொருட்கள் சட்டவிரோதமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததே அசம்பாவிதம் ஏற்படக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.

