ADDED : ஆக 07, 2025 12:26 AM
சண்டிகர்: பஞ்சாபின் மொஹா லியில் உள்ள எஸ்.ஏ.எஸ்., நகரில், 'ஹைடெக் காசஸ்' என்ற பெயரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகிக்கும் ஆலை இயங்கி வருகிறது.
வழக்கம் போல், ஆலை திறக்கப்பட்டதை அடுத்து, நேற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வாகனங்களில் ஏற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், தொழிலாளர்கள் இருவர் உடல் சிதறி பலியாகினர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில், அப்பகுதியில் உள்ள கட்டடங்களின் ஜன்னல்கள், சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சுற்றுப் பகுதியில் இருந்த வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டது.
வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டரின் ஒரு சில பகுதிகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் கண்டெடுக்கப்பட்டன. சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறிய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.