இழுபறியில் ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு பனாமா உள்ளிட்ட நாடுகள் கடும் அதிருப்தி
இழுபறியில் ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு பனாமா உள்ளிட்ட நாடுகள் கடும் அதிருப்தி
UPDATED : நவ 21, 2026 10:40 PM
ADDED : நவ 21, 2026 10:35 PM

அன்டால்யா: துருக்கியில் நடந்த காலநிலை உச்சி மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களை பயன்பாட்டை குறைப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படாததால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
உலகம் முழுதும் வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, கடந்த 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, புவி வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், கரியமில வாயு, புதைபடிவ பயன்பாட்டை குறைக்க பணக்கார நாடுகள் முன்வராததால், கட்டுப்படுத்தும் இலக்கை உலகம் தாண்டிவிடும் என ஐ.நா., ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இந்நிலையில், மேற்காசிய நாடான துருக்கியின் அன்டால்யா நகரில் கடந்த 19ம் தேதி தொடங்கிய காலநிலை உச்சி மாநாட்டில், புதைபடிவ பொருட்களின் பயன்பாட்டை கணிசமாக குறைப்பது குறித்து எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை.
இந்தச் சூழலில் மாநாடு இறுதிகட்டத்தை எட்டியதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக, 200 நாடுகள் பங்கேற்ற இம்மாநாட்டின் இறுதி வரைவு அறிக்கையில் புதைபடிவ எரிபொருள்கள் என்ற வார்த்தையே நீக்கப்பட்டிருப்பதற்குப் பனாமா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பருவநிலை நிதி ஒதுக்கீடு சேர்க்கப்படாவிட்டாலும், எண்ணெய் உற்பத்திக்கு வரம்பு விதிக்கப்படாவிட்டாலும் இறுதி ஒப்பந்தத்திற்கு முறையான ஆட்சேபனை தெரிவிக்கப் போவதாகப் பனாமா அறிவித்துள்ளது.
வரும், 2035-ம் ஆண்டிற்குள் உலகளாவிய மொத்த ஆற்றல் நுகர்வில் மின்சாரத்தின் பங்கை தற்போதைய 21 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்துவது என்பது வரைவு ஒப்பந்தத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், அந்த மின்சாரம் சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்தே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று வரைவில் குறிப்பிடப்படாததால், புதைபடிவ எரிபொருள் மின் நிலையங்களையும் இதற்குள் கணக்கிடும் அபாயம் உள்ளதாக கிரீன்பீஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிதியை மும்மடங்காக உயர்த்த வேண்டும் என்று வரைவில் கூறப்பட்டிருந்தாலும், அதற்கான குறிப்பிட்ட தொகை குறிப்பிடப்படவில்லை.
பணக்கார நாடுகள் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிதியைக் கூட வழங்காத நிலையில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமும் முக்கிய மாசுபடுத்தும் நாடுமான அமெரிக்கா இந்த ஆண்டு மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்காதது பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அடுத்தாண்டுக்கான காலநிலை உச்சி மாநாடு, 2027 நவம்பரில் எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நடைபெற உள்ளது.
