UPDATED : ஜன 07, 2026 11:12 PM
ADDED : ஜன 07, 2026 10:37 PM

புதுடில்லி: 2026 -2027 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்.,01 ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் பிப்.,1 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு பிப்.,1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், 2026 - 27 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் பட்ஜெட் தாக்கல் போன்ற மிக முக்கிய நிகழ்வுகளுக்காக பார்லிமென்ட் கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கடந்த 1999 - 2000 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, 1999ம் ஆண்டு பிப்.,28 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில் பிப்., 1 அன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது என ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி உரையுடன் துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜன.,29 ல் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

