மத்திய பட்ஜெட்; ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிர்மலா சந்திப்பு
மத்திய பட்ஜெட்; ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிர்மலா சந்திப்பு
UPDATED : பிப் 01, 2026 11:10 AM
ADDED : பிப் 01, 2026 10:01 AM

- புதுடில்லி: 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 01) தாக்கல் செய்யும் முன்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த 28ல், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இந்நிலையில், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இன்று காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த ஒன்பதாவது பட்ஜெட். இதன் மூலம், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அவர் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து திரவுபதி முர்முவிடம் விளக்கி உள்ளார்.
அவருக்கு ஜனாதிபதி இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட் வந்தடைந்தார். அவர் நிதித்துறை அதிகாரிகளுடன் பார்லி வளாகத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல் முறை
நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில், ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள், நிதி தொகுப்புகள் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நடுத்தர வர்க்கத்தினரை கவரும் வகையில் கவர்ச்சி அறிவிப்புகளும் இடம் பெறலாம்.
ஒப்புதல்
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

