பிப்.,1ல் பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம்: காரணம் என்ன?
பிப்.,1ல் பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம்: காரணம் என்ன?
UPDATED : பிப் 01, 2026 11:09 AM
ADDED : பிப் 01, 2026 10:11 AM

புதுடில்லி: இந்தியாவில் அதிகம் பேரால் கவனிக்கப்படும் நிகழ்வாக மத்திய பட்ஜெட் தாக்கல் உள்ளது. இதில் தான் வரும் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு மற்றும் செலவு, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை இடம்பெறும்.
மத்திய பட்ஜெட் கடந்த 2016 முதல் பிப்ரவரி 1 ம் தேதியன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு முன்னர், பிப்ரவரி கடைசியில் தான் தாக்கல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
காரணம் என்ன
2016 ம்ஆண்டு வரை மத்திய பட்ஜெட்டிற்கு ஆங்கிலேயர் கால நடைமுறையான பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதேநேரத்தில் புதிய நிதியாண்டு ஏப்ரல் 1ல் துவங்குகிறது. அதற்குள் மத்திய அரசின் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளுக்கு மாற அமைச்சகங்கள், வணிகங்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு போதுமான கால அவகாசம் கிடைப்பதில்லை. இதனால், பலர் சிக்கலுக்கு உள்ளாகினர். மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைத்து, அமலுக்கு வருவதற்குள் புதிய நிதியாண்டு துவங்கிவிடும். இதனால், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அமல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
2017 ல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முதல்முறையாக பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது முதல் பிப்ரவரி 1ம் தேதியை மத்திய பட்ஜெட் தாக்கல் என முடிவு செய்யப்பட்டது. புதிய நிதியாண்டு துவங்குவதற்கு முன்னர், அனைவருக்கும் போதிய அவகாசம் கிடைக்க வேண்டும் என்பதே இதற்கான முக்கிய நோக்கம் ஆக ஆகும்.
பட்ஜெட் தேதி மட்டும் அல்ல, பட்ஜெட் தாக்கலுக்கான நேரமும் மாற்றப்பட்டது. 1999ம் ஆண்டுவரை மத்திய பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணிக்கு மாற்றினார். இதன் மூலம் பட்ஜெட் குறித்த செய்திகளை மீடியா கவரேஜ் கிடைக்க செய்யவும், பொது மக்கள் மத்தியில் விவாதிக்கவும் ஏதுவாக அமைந்தது.
ஞாயிற்றுக்கிழமை
இந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் இருக்குமா என கேள்வி எழுந்தது. ஆனால், இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் உறுதி என மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்தது.
நிர்மலா சீதாராமன் சாதனை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து இன்று சாதனை படைத்தார்.

