உத்தராகண்ட் மேகவெடிப்பு: 274 பேர் மீட்பு; 60 பேரை தேடுவதில் சிக்கல்
உத்தராகண்ட் மேகவெடிப்பு: 274 பேர் மீட்பு; 60 பேரை தேடுவதில் சிக்கல்
ADDED : ஆக 08, 2025 03:26 AM

டேராடூன்: வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உத்தராகண்டில், இதுவரை 274 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 60 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த 5ம் தேதி, மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது.
கீர் கங்கா நீர்ப்பிடிபுப் பகுதியில் பெய்த கனமழையால், மலை உச்சியில் இருந்து சேறும், சகதியுடன் பெருவெள்ளம் பெருக்கெடுத்தது.
இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தாராலி கிராமத்தின் பாதி பகுதி மண்ணில் புதைந்தது. இந்த கோர சம்பவத்தில், ஐந்து பேர் பலியாகினர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினருடன் இணைந்து ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலை சார்ந்த பகுதி என்பதால், வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை விமானம் வாயிலாக மீட்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் இறந்தது உறுதியாகியுள்ளது. இதுவரை 274 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரு அதிகாரி, எட்டு வீரர்கள் என ஒன்பது ராணுவத்தினர் உட்பட 60 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை ஐஜி அருண் மோகன் ஜோஷி கூறுகையில், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இடிபாடுகளை அகற்ற தேவையான உபகரணங்களை கொண்டு செல்வதில் கடும் சிக்கல் நிலவுகிறது.
“சாலைகள் சேதமடைந்துள்ளதால், விமானம் வாயிலாக அவற்றை எடுத்து செல்கிறோம். பல இடங்களில் 60 அடி உயரத்துக்கு இடிபாடுகள் தேங்கியுள்ளன. மாயமானவர்கள் அவற்றின் அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
“வெள்ளம் அடித்து செல்லப்பட்ட பகுதிகளில் பல ஹோட்டல்கள் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இங்கு, ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்தனர். இவர்கள், அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது,” என்றார்.