மும்பை – பெங்களூரு இடையே 10ல் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்?
மும்பை – பெங்களூரு இடையே 10ல் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்?
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 05:44 PM
பெங்களூரு: மும்பை – பெங்களூரு இடையே படுக்கை வசதியுடன் கூடிய, ‘வந்தே பாரத்’ ரயில் சேவை, வரும் 10ம் தேதி துவங்கப்படும் என தெரிகிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூரு, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை இணைக்கும் வகையில், தினமும் உதயன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் பயண நேரம், 24 மணி நேரமாக உள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘மும்பை – பெங்களூரு இடையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்’ என அறிவித்தார்.
அறிவிப்பு வெளியாகி எட்டு மாதங்கள் ஆகியும், ரயில் இயக்குவது தொடர்பான எந்த அறிகுறியும் தென்படாமல் இருந்தது. இந்நிலையில் ரயில் இயக்குவது தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியாகின.
அதாவது மும்பை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு வண்டி எண்களாக 27651/27652 கொடுக்கப்பட்டுள்ளது. அனந்த்பூர், குண்டக்கல், ராய்ச்சூர், கலபுரகி, சோலாபூர், புனே, கல்யாண் ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து திங்கட்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து, செவ்வாய் கிழமை தவிர வாரத்தில், ஆறு நாட்களும் ரயில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பயண நேரம் 16 மணி நேரமாக இருக்கும்.
ரயில் சேவை துவங்குவதற்கான அதிகாரபூர்வ தேதி இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் வரும் 10 அல்லது 11ம் தேதிகளில், ரயில் சேவை துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
