மும்பை மேயரை நாங்கள் தான் தேர்வு செய்வோம்; மஹா., முதல்வர் பட்னவிஸ் பதிலடி
மும்பை மேயரை நாங்கள் தான் தேர்வு செய்வோம்; மஹா., முதல்வர் பட்னவிஸ் பதிலடி
ADDED : ஜன 18, 2026 10:49 PM

மும்பை: “மும்பை மேயர் யார் என்பதை நாங்களே முடிவு செய்வோம். அதில் யாரும் குறுக்கிட முடியாது,” என உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 28 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சி, தற்போது, பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கூட்டணி வசம் சென்றுள்ளது. இந்நிலையில், 'கடவுள் அருள் இருந்தால், 28 ஆண்டுகால பாரம்பரியம் மீண்டும் தொடரும்' என உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து கூறியிருந்தார்.
இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளதாவது:மும்பை மேயர் யார் என்பது தொடர்பான முடிவை, ஏக்நாத் ஷிண்டேவும் நானும் சேர்ந்தே எடுப்போம். இதில், எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
தாக்கரே தேவா என குறிப்பிட்டது என்னையா அல்லது கடவுளையா என தெரியவில்லை. ஏனெனில் என் பெயரும் தேவா தான். எதுவாக இருந்தாலும், தற்போது சர்வ வல்லமை படைத்த கடவுளின் அருள் எங்கள் பக்கமே இருக்கிறது.
எனவே, மஹாயுதி கூட்டணியைச் சேர்ந்தவர் தான் மும்பையில் அடுத்த மேயராக பதவி வகிப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

