இறந்தவரின் கண் எங்கே; மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்: எலி மீது பழி போடும் டாக்டர்கள்
இறந்தவரின் கண் எங்கே; மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்: எலி மீது பழி போடும் டாக்டர்கள்
ADDED : நவ 17, 2024 07:37 AM

பாட்னா: பீஹார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது இடது கண்ணை காணவில்லை என்று உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நோயாளியின் உறவினர் கூறியதாவது: வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில், எனது உறவினர் பான்டஸ் குமாரை, பாட்னாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான நாலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கடந்த வியாழன் அன்று அனுமதித்தோம். குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த பின் வெள்ளிக்கிழமை இரவு அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அதிகாலையில் மருத்துவமனையில் உடலை பெற உறவினர்கள் வந்து இருந்தனர். நானும் சென்று பார்த்தபோது, மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. உயிரிழந்த குமாரின் இடது கண் இல்லாமல் இருந்தது. வியாபார நோக்கத்தோடு மருத்துவர்கள் கண்ணை எடுத்துவிட்டார்கள் என நாங்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டோம். அவர்கள் எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியும்?
அவரை சுட்டுக் கொன்றவர்களுடன் மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் சதி செய்துள்ளார். இல்லாவிட்டால் மருத்துவமனை மக்களின் கண்களைப் பறிக்கும் தொழிலில் ஈடுபடுவதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, மருத்துவமனையில் எலி பிரச்சனை உள்ளது. எலி கடித்து இருக்கலாம் என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், உயிரிழந்தவரின் கண் எடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உடலில் சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எலிகள் கண்ணை கடித்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

