தெரு நாய்களுக்கு யார் உணவளிப்பது? நவ., 7ல் முடிவு செய்கிறது உச்ச நீதிமன்றம்!
தெரு நாய்களுக்கு யார் உணவளிப்பது? நவ., 7ல் முடிவு செய்கிறது உச்ச நீதிமன்றம்!
ADDED : நவ 04, 2025 12:28 AM

தெரு நாய்களுக்கு உணவு வைக்கும் விவகாரத்தில், வரும் 7ம் தேதி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, இது தொடர்பாக கடந்த ஆக., 11ல் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.
டில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுற்றித்திரியும், தெருநாய்களை பிடித்து உடனடியாக காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றம் நிராகரிப்பு இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பலர், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்த மனுக்கள், ஆக., 22ல் விசாரணைக்கு வந்தன. அப்போது, தெருநாய்க்கடி சம்பவத்தை சமாளிப்பது தொடர்பாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்தும் விளக்கம் அளிக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெருநாய் கருத்தரிப்பு தடுப்பு அறுவை சிகிச்சை எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கடந்த 27ல் நடந்த விசாரணையின் போது, மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர, பிற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
மேலும், தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
வழிகாட்டு நெறிமுறை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில தலைமை செயலர்களும் நேரில் ஆஜராகினர். கேரள தலைமை செயலர் தாக்கல் செய்த விலக்கு கோரும் மனுவை அனுமதித்த நீதிபதிகள், அம்மாநில முதன்மை செயலர் நேரில் ஆஜராகியிருந்ததை கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து மாநில பிரமாண பத்திரங்களையும் ஆராய்ந்து ஒருங்கிணைந்த குறிப்பாக தரும்படி, வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசுகள் அலட்சியமாக எடுத்துக் கொண்டதால்தான், தலைமை செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின் நீதிபதிகள், 'தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆங்காங்கே தெரு நாய்களுக்கு உணவளிக்கும் சூழலை பார்க்க முடிகிறது.
'இந்த விஷயத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதலாக சில வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க உள்ளோம். இதற்காக வழக்கு விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

