தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உத்தர பிரதேசத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார்? 3 அம்சங்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் பா.ஜ.,

உத்தர பிரதேசத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார்? 3 அம்சங்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் பா.ஜ.,

உத்தர பிரதேசத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார்? 3 அம்சங்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் பா.ஜ.,


ADDED : நவ 14, 2026 05:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 05:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– சிறப்பு நிருபர் –: உத்தர பிரதேசத்தில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில், ஆளும் பா.ஜ., கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி – காங்., கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து இரு முறை தேர்தலில் வென்று ஆட்சிக் கட்டிலில் உள்ள பா.ஜ., மூன்றாவது வெற்றியை பெற பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளது. அக்கட்சிக்கு சவால் அளிக்கும் வகையில் சமாஜ்வாதி கூட்டணியும் காய் நகர்த்தி வருவதால், மாநிலத்தில் தற்போதே தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மொத்தம், 403 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகளுடைய இங்கு ஆட்சியை கைப்பற்றினால், மத்தியிலும் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது எழுதப்படாத விதி.

தொடர்ந்து இரு முறை தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ., மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கில், பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் பா.ஜ., கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், 62ஐ கைப்பற்றிய பா.ஜ., 2024 தேர்தலில் வெறும், 33 தொகுதிகளையே வென்றது. இந்த சூழலில், வரும் சட்டசபை தேர்தலில், 325 – 350 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, ‘அமைப்பு, அரசு, கூட்டணி’ ஆகிய மூன்று துாண்களை மையமாக வைத்து அக்கட்சி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

அமைப்பு



பீஹாரில், 2025ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக விளங்கியவர், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் வினோத் தாவ்டே. பிரமாண்ட வெற்றி தேடித்தந்த இவரை, கடந்த ஆகஸ்டில், உ.பி., மேலிட பொறுப்பாளராக பா.ஜ., மேலிடம் நியமித்தது.

உ.பி., – பா.ஜ., தலைவர் பங்கஜ் சவுத்ரியுடன் இணைந்து பணியாற்றி வரும் வினோத் தாவ்டே, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கும், கட்சி அமைப்புக்கும் இடையே பாலமாக செயல்பட்டு பூத் கமிட்டிகளை பலப்படுத்தி வருகிறார். அடிமட்ட அளவில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, பூத் அளவிலான நிர்வாகிகளை மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட வைப்பது, தொகுதிகளில் உள்ள குறைகளை கண்டறிவது ஆகியவற்றில், பா.ஜ., கவனம் செலுத்துகிறது.

அதிருப்தியில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சியில் ஒருங்கிணைப்பதும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். உட்கட்சி பிரச்னைகள் தேர்தல் வெற்றியை பாதிக்காமல் தடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ஆட்சிக்கு எதிரான அலையை தடுக்க, தற்போதைய எம்.எல்.ஏ-.,க்களில், 40 சதவீதம் பேருக்கு, அதாவது, 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசு



மாபியாக்களுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கை, மேம்பட்ட சட்டம் – -ஒழுங்கு, 9.5 லட்சம் அரசு பணி நியமனங்கள், ‘மிஷன் சக்தி’ திட்டத்தின் கீழ், 3.6 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் உலகளாவிய முதலீடுகளை முன்னிறுத்தி, முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்கிறார். இந்த தேர்தலை, ‘தேசியவாதத்திற்கும், அராஜகத்திற்கும் இடையிலான போர்’ என, அவர் வர்ணித்துள்ளார்.

கூட்டணி



ராஷ்ட்ரீய லோக் தளம், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அப்னா தளம் சோனேலால், நிஷாத் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளை தக்கவைத்து, ஜாதி மற்றும் பிராந்திய ஓட்டுகளை ஒருங்கிணைக்க, மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், 60ஐ கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

சமாஜ்வாதி – காங்., கூட்டணி



கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு பலத்த அடி கொடுத்த உத்வேகத்தில், இந்த சட்டசபை தேர்தலை சமாஜ்வாதி – காங்., கூட்டணி எதிர்கொள்கிறது. கடந்த லோக்சபா தேர்தல் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை சமாஜ்வாதியிடம் காங்., கேட்டுள்ளது. இதற்காக, 150 – 175 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலையும் அக்கட்சி வழங்கி உள்ளது.

எனினும், மாநிலத்தில் வலுவான மற்றும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் சமாஜ்வாதி, காங்கிரசுக்கு, 60க்கும் குறைவான தொகுதிகளை வழங்கவே முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிக தொகுதிகளை காங்கிரசுக்கு வழங்கக்கூடாது என்பதில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

‘வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணி, 322 இடங்களை வெல்லும்’ என, முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த சூழலில், தனியார் தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், தே.ஜ., கூட்டணி, 183 – 192 இடங்களையும், சமாஜ்வாதி கூட்டணி, 195 – 204 இடங்களையும் பெறும் என, தெரிவிக்கப்பட்டு, களம் மிகவும் இழுபறியாக இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மாநில அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. உ.பி., தேர்தல் முடிவுகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமைக்கு மட்டுமல்லாது, 2029 லோக்சபா தேர்தலின் தேசிய அரசியல் போக்கையும் தீர்மானிக்கும் மிக முக்கிய மைல்கல்லாக அமையும்.

‘இண்டி’ கூட்டணிக்கு அடி?


உ.பி., சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தெலுங்கானாவின் ஹைதராபாத் தொகுதி எம்.பி., அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி மற்றும் நகினா தொகுதி எம்.பி., சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை இணைந்து, ‘சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா’ என்ற புதிய கூட்டணியை அறிவித்துள்ளன. 403 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ஓவைசி, சந்திரசேகர் ஆசாத்தை முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தி உள்ளார்.
உ.பி., மக்கள் தொகையில் முஸ்லிம்கள், 19 – 20 சதவீதமும், தலித்துகள், 21 சதவீதமும் உள்ளனர். முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, களத்தில் மந்தமாக உள்ள சூழலில், இந்த புதிய கூட்டணி தலித் மற்றும் முஸ்லிம் ஓட்டுகளை பிரித்தால், அது பா.ஜ.,வை விட சமாஜ்வாதி – காங்., கூட்டணிக்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.



மண்டல வாரியாக


அமித் ஷா ஆய்வு
உ.பி.,யை, பா.ஜ., தன் நிர்வாக வசதிக்காக, ‘அவத், பிரஜ், கோரக்பூர், காசி, கான்பூர்- – புந்தேல்கண்ட், மேற்கு உ.பி.,’ என, ஆறு மண்டலங்களாக பிரித்துள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்த ஆறு மண்டலங்களிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதன்படி, இம்மாத இறுதியில் உ.பி.,க்கு வரும் அவர், முதற்கட்டமாக, இரு முக்கிய மண்டலங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். வெறுமனே கூட்டங்களில் பங்கேற்று திரும்பாமல், ஆறு மண்டலங்களிலும் அமித் ஷா இரவில் தங்கி பணியாற்றுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், உள்ளூர் தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், கள நிலவரங்களை துல்லியமாக அறியவும் நேரம் கிடைக்கும். மேலும், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து, மாவட்ட அளவில் மாபெரும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்கிறார். மண்டல அளவிலான சவால்களை கண்டறிந்து, உள்ளூர் தலைவர்களிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலம், தேர்தல் பிரசாரத்திற்கு இப்போதே வலுவான அடித்தளமிட ஆளும் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us