காற்று மாசு அதிகரிப்பது ஏன்? அமைச்சர் சிர்சா விளக்கம்
காற்று மாசு அதிகரிப்பது ஏன்? அமைச்சர் சிர்சா விளக்கம்
ADDED : நவ 15, 2025 10:43 PM

புதுடில்லி: “கட்டுமான தளங்களில் உருவாகும் கழிவுகள், துாசி நிறைந்த சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால், டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது,”என, டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.
தீபாவளிப் பண்டிகைக்குப் பின், தலைநகர் டில்லியில் காற்று மாசு அபாயகரமான நிலைக்குச் சென்றது. அவ்வப்போது மிகமோசமான நிலைக்கு சரிந்தாலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. முதியோர், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
கட்டுமானத் தளங்களில் உருவாகும் கழிவுகள், துாசி நிறைந்த சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் காற்று மாசு அதிகரிக்கிறது. மாநகர் முழுதும் ஆய்வு செய்து மாசு அதிகம் நிறைந்த 62 இடங்களைக் கண்டறிந்துள்ளோம். அங்கு, காற்று மாசை கட்டுப் படுத்தும் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளது.
துாய்மைப் பணி மற்றும் சாலைகளில் படிந்துள்ள துாசுக்களை அகற்றும் பணியும் மும்முரமாக நடக்கிறது. குளிர்காலம் துவங்கி விட்டதால், காற்றில் படிந்துள்ள துாசி படிப்படியாக புகைமூட்டம் போல மாறுகிறது. மேலும், அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதாலும் டில்லியில் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், அடுத்த பருவத்துக்கான விதைப்பு காலம் விரைவில் துவங்குவதால், டில்லியில் காற்று மாசு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

