கோத்ரா ரயில் எரிப்பை அரசியலாக்குவதா? காங்., சோனியா எழுதிய சுயசரிதை புத்தகம் குறித்து சி.பி.ஐ., ‘மாஜி’ இயக்குனர் கருத்து
கோத்ரா ரயில் எரிப்பை அரசியலாக்குவதா? காங்., சோனியா எழுதிய சுயசரிதை புத்தகம் குறித்து சி.பி.ஐ., ‘மாஜி’ இயக்குனர் கருத்து
UPDATED : நவ 14, 2026 09:48 PM
ADDED : நவ 14, 2026 09:48 PM
புதுடில்லி: ‘குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்திற்கான காரணம் சர்ச்சைக்குரியது’ என, காங்கிரஸ் தலைவர் சோனியா தன் சுயசரிதையில் குறிப்பிட்டதை, அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து, கடந்த 2002, பிப்ரவரி 27ல், குஜராத்துக்கு திரும்பிய சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ராவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுதும் கலவரம் வெடித்தது.
இந்த வழக்கை விசாரித்த குஜராத் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2011ல் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. பின், 2014ல் குஜராத் உயர் நீதிமன்றம் 11 பேரின் தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில் காங்., மூத்த தலைவர் சோனியா எழுதிய, ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ என்ற சுயசரிதை புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், ‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் ரயிலின் நான்கு பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் அயோத்தி கரசேவகர்கள், 59 பேர் இறந்தனர். தீ விபத்துக்கான காரணம் சர்ச்சைக்குரியது’ என, குறிப்பிட்டுள்ளார்.
ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சி.பி.ஐ.,யின் முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சோனியாவின் கருத்தை மறுத்து நேற்று, அளித்த பேட்டி:
சோனியாவின் கருத்து முற்றிலும் தவறானது. தீ விபத்து குறித்த விசாரணை முழுதும் முடிந்துவிட்டது. தடயவியல் ஆய்வுகள் மூலம் தீ விபத்துக்கான காரணம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. கோத்ராவில் இறந்தவர்கள் ஹிந்துக்கள். இறந்தவர்கள் யாராக இருந்தாலும், அது ஒரு கிரிமினல் செயல். இந்த அடிப்படையில் தான் விசாரணை நடத்தப்பட்டது. தீ விபத்து குறித்து தொடர்ந்து சந்தேகம் எழுப்புவது அரசியல் காரணங்களுக்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
