தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மாதவிடாய் கால விடுமுறைக்கு பெண்கள் அமோக ஆதரவு

மாதவிடாய் கால விடுமுறைக்கு பெண்கள் அமோக ஆதரவு

மாதவிடாய் கால விடுமுறைக்கு பெண்கள் அமோக ஆதரவு


ADDED : செப் 24, 2024 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய நவீன காலகட்டத்தில், அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். பெண்களால் முடியாதது எதுவுமே இல்லை என்ற சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளது. அந்த அளவுக்கு அவர்களுக்கு மனவலிமை உள்ளது.

ஆனால் உடல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும்போது, தன்னம்பிக்கையை சற்று இழந்து விடுகின்றனர். இதில் முக்கியமான ஒன்று, மாதம்தோறும் வரும் மாதவிடாய். மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை, பெண்கள்மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஓய்வு


அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலை பளுவுடன் சேர்த்து, மாதவிடாய் பிரச்னையும் அனுபவித்து வருகின்றனர். தங்களின் வலி, வேதனையை, யாரிடமும் சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கித் தவிக்கின்றனர்.

மாதவிடாய் காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அரைமணி நேரம் ஓய்வு கிடைத்தால் கூடநன்றாக இருக்கும் என்று நினைப்பதும் உண்டு.

கர்நாடகாவில் அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கு, கிறிஸ்டி பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் சப்னா தலைமையில் 18 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது.

இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு, ஆண்டுக்கு ஆறு நாள் மாதவிடாய் விடுமுறையை சம்பளத்துடன் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

சவால்கள்


இதுகுறித்து தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு, பல்வேறு உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த காலத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்தும், ஓய்வின் அவசியம் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பீஹார், கேரளா, ஒடிசா மாநிலங்களில் மாதவிடாய் விடுப்பு கொள்கை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதுகுறித்து பல்வேறு பெண்கள் அமைப்பு, தனியார் நிறுவனங்களின் கருத்துகளை சேகரிப்போம். தொழிற்சாலைகளுடன் பேச்சு நடத்தப்படும்.

அறிக்கையில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆராயப்படும். அனைவரின் கருத்தையும் சேகரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர்கூறினார்.

மன அழுத்தம்

மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வலி அதிகம் இருக்கும். இத்தகைய பெண்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். அதிக கோபம் கொள்வர்; தலைவலி வரும். சிலர் வழி தாங்க முடியாமல் மாத்திரைகளும் எடுத்துக் கொள்வர். ஒரு சில பெண்களுக்கு மட்டுமே அவ்வளவாக வலி இருக்காது. மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்தால் அது கண்டிப்பாக வரவேற்கத்தக்கது. ஆனால் ஆறு நாட்கள் விடுமுறை என்பது மிகவும் குறைந்தது. ஆண்டிற்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கலாம்.

நந்தினி பிரியா, டாக்டர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை.

தேவையான உதவி

மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமில்லை, இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்கும் கஷ்டம் தான். அவர்களுக்கும் வீட்டில் ஏராளமான வேலை இருக்கும். குடும்ப சூழ்நிலைக்காக பெண்கள் வலியையும் பொறுத்துக் கொண்டு வேலைக்குச் செல்கின்றனர். வலியை வெளியே யாரிடமும் சொல்லவும் முடியாது. இந்த மாதிரியான நேரத்தில் பெண்களுக்கு பெண்கள் ஆதரவாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான வலியை ஆண்கள் அனுபவித்து இருக்க மாட்டார்கள். ஆனாலும் பெண்களின் கஷ்டத்தை புரிந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தேவி, சட்ட நிறுவன ஊழியர்.

ஓய்வுக்கு வாய்ப்பு

மாதவிடாய் காலத்திலும் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் எப்போதும் என் பாராட்டுகள். பெண்களை எப்போதும் மதிக்கவும், கவுரவிக்கவும், அவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வாய்ப்பாக இருக்கும். நன்றாக ஓய்வெடுக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

- கிருஷ்ணவேணி, செயலர்,

கர்நாடக இந்து நாடார் அசோசியேஷன்

சானிடரி நாப்கின்

மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது நல்ல விஷயம் தான். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு, உடல் மிகவும் அசதியாக இருக்கும். விடுமுறை எடுத்துக் கொண்டால் சம்பளத்தில் பிடித்தம் ஏற்படுமோ என்ற பயத்தில், பெண்கள் கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு வேலைக்கு வருகின்றனர். அவர்களுக்கு, அரசு தரம் உயர்ந்த சானிடரி நாப்கின் கொடுத்தாலும் நல்லது.

திவ்யா, சமூக ஆர்வலர், பசவனகுடி.

49 வயதுக்கு மேல்

மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே உடல் வலி ஏற்படும். ஆனாலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, சம்பளத்திற்காக வேலையை தவிர்க்க முடியாது. 49 வயதுக்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும் என்றாலும், அதுவரையிலும் கஷ்டப்படுகின்றனர். சிலருக்கு மாதவிடாய் நின்றாலும், அதன் வலி மட்டும், தீர்ந்த மாதிரி தெரியவில்லை. ஹார்மோனில் மாற்றம் ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது. மாதவிடாய் கால விடுமுறை பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

கீதா, வக்கீல், பெங்களூரு மாவட்ட நீதிமன்றம்.

மாதவிடாய் கால விடுமுறை குறித்து பெண்கள் தெரிவித்து கருத்துகள்

:

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us