யானைகள் ரயிலில் அடிபடாமல் பாதுகாக்க 'ரயில் வேலி' பணி அமைக்கும் பணி தீவிரம்
யானைகள் ரயிலில் அடிபடாமல் பாதுகாக்க 'ரயில் வேலி' பணி அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஜன 28, 2026 01:23 PM

பாலக்காடு: வனவிலங்குகள் ரயில் தண்டவாளத்தைக் கடப்பதையும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதையும் தடுப்பதற்காக, ரயில்வே நிர்வாகம் வனப்பகுதிக்குள் அமைத்து வரும் 'ரயில் வேலி' கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கோவைக்கு செல்லும் ரயில் பாதை வன எல்லையில் செல்கிறது. முன்பு இப்பாதையில் யானை உட்பட வனவிலங்குகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தொடர்கதையாக இருந்தது. இதற்கு தீர்வு காண பல திட்டங்களை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வனவிலங்குகள் ரயில் தண்டவாளத்தைக் கடப்பதையும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதையும் தடுப்பதற்காக, முதற்கட்டமாக எட்டிமடை மற்றும் வாளையார் இடையே, வனஎல்லையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட 'ரயில் வேலி' கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாம் கட்டமாக, கஞ்சிக்கோடு பகுதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது.
இது குறித்து, பாலக்காடு கோட்டம் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பாதையில் வன விலங்குகள் விபத்தில் சிக்காமல் இருக்க, ரயில்வே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 'ரயில் வேலி' மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, யானை ஊடுருவல் கண்டறியும் அமைப்பு, அலாரங்கள், தெர்மல் கேமராக்கள், தொங்கு வேலிகள், சூரிய சக்தி வேலிகள் மற்றும் தேனீ சத்த எழுப்பும் கருவிகள் எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இத்துடன் யானைகள் பாதுகாப்பாகக் கடக்க ஒரு சுரங்கப்பாதையும் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு சுரங்கப்பாதையின் கட்டுமானமும் இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது நடக்கும் ரயில் வேலி பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டங்கள் வாயிலாக யானைகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாவது குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

