ADDED : மார் 18, 2024 05:36 AM

ஷிவமொகா, ''முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மகன் காந்தேஷுக்கு, சீட் கை நழுவ நான் காரணம் அல்ல. மத்திய தேர்தல் கமிட்டியின் முடிவுபடி, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்,'' என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
ஈஸ்வரப்பா என்னை பற்றி, தவறாக நினைத்துள்ளார். அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். கோபத்தில் ஏதேதோ பேசுகிறார்.
அவரது மகன் காந்தேஷுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு, நான் காரணம் அல்ல. மத்திய தேர்தல் கமிட்டி முடிவுப்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அனைத்தும் சரியாகும் என நினைக்கிறேன். மாநில தலைவர்கள், அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். என்னை பற்றி அவர் தவறாக நினைக்க கூடாது. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சிக்கு, ஈஸ்வரப்பா வருகை தருவார்.
கலபுரகியில் மோடி நிகழ்ச்சி வெற்றி அடைந்துள்ளது. மாநிலத்தின் 28 தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெறும். ஷிவமொகாவில் ஏற்கனவே வெற்றி உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

