UPDATED : நவ 06, 2026 07:24 PM
ADDED : நவ 06, 2026 04:46 PM
புதுடில்லி: டில்லியில், பணத் தகராறில் காவலாளியை அடித்துக் கொலை செய்த வாலிபர், உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
வடமேற்கு டில்லி, மாடல் டவுனில், புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டுமான தளத்தில் காவலாளியாக வேலை செய்தவர், திலீப் குமார்,28. அங்கு, பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராகுல்,30 என்பவரும் கட்டுமான வேலை செய்தார்.
கட்டுமான தளத்திலேயே இருவரும் தங்கியிருந்தனர். அப்போது, ராகுல் மீது எச்சில் துப்பியும், கிண்டலாக பேசியும் பல முறை திலீப் குமார் அவமானப்படுத்தியுள்ளார். சம்பவத்தன்று, கான்ட்ராக்டரிடம் இருந்து தொழிலாளர்களுக்கான கூலியை வாங்கிய திலீப் குமார், ராகுலுக்கு மட்டும் பணத்தை கொடுக்கவில்லை. தீபாவளிக்காக ஊருக்கு செல்ல பணம் வேண்டும் என ராகுல் கேட்ட போது, அவர் மீது எச்சிலை துப்பியுள்ளார்.
ஏற்கனவே, கடும் ஆத்திரத்திலும் மன உளைச்சலிலும் இருந்த ராகுல், இரும்புக் கம்பியால் திலீப் குமாரை சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த திலீப், அதே இடத்திலேயே உயிரிழந்தார். ராகுல் தப்பி ஓடினார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், திலீப் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ராகுலை தேடினர். உத்தர பிரதேச மாநிலம், முகல் சராய் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருந்த ராகுல், நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணை நடக்கிறது.
