இளைஞர் விழா நடுவர் தற்கொலை: மார்க்சிஸ்ட் மீது காங்கிரஸ் புகார்
இளைஞர் விழா நடுவர் தற்கொலை: மார்க்சிஸ்ட் மீது காங்கிரஸ் புகார்
ADDED : மார் 15, 2024 06:22 AM

புதுடில்லி: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள திருவனந்தபுரத்தில் பல்கலைகளுக்கு இடையிலான இளைஞர் திருவிழா சமீபத்தில் நடந்தது. இதில் நடத்தப்பட்ட போட்டிகளில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் பாரம்பரிய நடனமான மார்க்கம்களி போட்டி முடிவுகளை வெளியிடுவதில், நடுவர்களாக பங்கேற்றவர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இளைஞர் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
முடிவுகளை வெளியிடுவதில் முறைகேடு நடந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, நடுவர்களாக இருந்த கண்ணுாரைச் சேர்ந்த நடன மாஸ்டர் ஷாஜி, 51, உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதில், ஜாமினில் வெளியே வந்த ஷாஜி, நேற்று முன்தினம் இரவு அவரது அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், 'நான் ஓர் அப்பாவி. போட்டியில் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே மதிப்பெண்களை வழங்கினேன். லஞ்சம் எதுவும் வாங்கவில்லை' என குறிப்பிட்டிருந்தார். போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் கூறுகையில், ''கேரள பல்கலை இளைஞர் திருவிழாவில் நடுவராக பங்கேற்ற ஷாஜி மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது.
''அவர் அங்குள்ள மார்க்சிஸ்ட் இளைஞரணியைச் சேர்ந்த மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துள்ளார். குற்றவாளிகள், முதல்வர் பினராயி விஜயன் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்,'' என வலியுறுத்தினார்.

