ADDED : ஏப் 08, 2025 05:33 AM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முண்டூர் வன எல்லையில் உள்ள கயரம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் மேத்யூ; கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜி, 46. அவர்களுக்கு ஆன் மேரி, அலன் ஜோசப் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அலன் ஜோசப், கொல்லம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், விடுமுறையில் வீட்டிற்கு வந்த அலன் ஜோசப், தாய் விஜி இருவரும், நேற்று முன்தினம் இரவு அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்று வீடு திரும்பினர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வந்த யானையிடம் சிக்கிக்கொண்டனர். விஜியை துதிக்கையால் துாக்கி வீசிய யானை, அலன் ஜோசப்பை மிதித்து தாக்கியது.
இதில், அலன் ஜோசப் உயிரிழந்தார். யானை பிளிறும் சப்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த விஜியை திருச்சூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

