டிச 08, 2009 12:00 AM
டிச 08, 2009 12:00 AM
2010 ஆம் ஆண்டுக்கான ஐ.ஐ.டிஜே.இ.இ., ஏ.ஐ.பி.எம்.டி., முதலிய நாடு தழுவிய பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்குரிய நுழைவுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
இவை உள்ளிட்ட பல உயர்படிப்புத் துறைகளுக்குரிய நுழைவுத்தேர்வு, சேர்க்கை முறை முதலிய முக்கிய தகவல்களை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் நுழைவுத் தேர்வு
சேர்க்கைத் துறைப் பொறுப்பாளருமான கல்வியாளர் டாக்டர் ப.வே. நவநீத கிருஷ்ணன் வினாவிடை வடிவத்தில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு யாரால் எப்பொழுது நடத்தப்படுகிறது? இது எந்தவகைப் படிப்புக்குப் பொருந்தும்?
அகில இந்தியப் பொறியியல் நுழைவுத்தேர்வு (AIEEE- All India Engineering Entrance Examination) என்பது 2002 ஆம் ஆண்டு முதல், மத்திய உயர்நிலைக் கல்விக் குழுமத்தால் (CBSE) நடத்தப்படுகிறது.துவக்கத்தில் பொறியியலுக்கும், மருந்தியலுக்கும் (Pharmacy), கட்டடக்கலைக்கும் (Architecture) நடத்தப்பட்டது. இயற்பியல் + வேதியியல், கணிதம், உயிரியல், கட்டடக் கலை ஆகியவற்றில் 4 தேர்வுத்தாள்கள் இருந்தன. நாளடைவில் மாற்றங்கள் பெற்று, இன்று,இயற்பியல்,வேதியியல், கணிதம் ஆகியவை அடங்கிய ஒரு தாள் பொறியியலுக்கும் (B.E/B.TECH), கணிதம், நாட்டம் (Aptitude), வரைதல் (Drawing) ஆகியவை அடங்கிய ஒரு தாள் கட்டடக் கலையியலுக்கும் ஓரே நாளில் நடத்தப்படுகின்றன. பொதுவாக ஏப்ரல் இறுதி ஞாயிறு இத்தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி 2010 ல் தேர்வு நாள் ஏப்ரல் 25.முற்பகல் 930 மணிமுதல் 1230 வரை பொறியியலுக்குரிய முதல் தாளிலும், பிற்பகல் 200 முதல் 500 வரை கட்டடக்கலைக்கான இரண்டாம் தாளிலும் தேர்வு நடக்கும். தேவைக்கு ஏற்ப, இரண்டில் ஒன்றையோ, இரண்டையுமோ எழுதலாம்.
இத்தேர்வின் மூலம் எந்த வகைப் பொறியியல் கல்லூரியில் சேர இயலும்?
நாடு தழுவி உள்ள தேசியத் தொழில் நுட்பக் கழகங்கள் (NITs - National institutes of Technology) அனைத்திலும் பி.டெக்., படிப்புக்கு இந்தத் தேர்வையும் அதன் அடிப்படையில் நடத்தப்படும் கலந்தாய்வையும் கொண்டுதான் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த NITS அகர்தலா முதல், திருச்சி உள்ளிட்டு, வாரங்கல் வரையிலான 20 நகரங்கள் முன்பேயும், புதுச்சேரி உள்ளிட்ட 9 புதிய நகரங்களில் உள்ளன. இவை தவிர, சில தேசியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்களும் (NITS), தேசியத் தகவல் தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகங்களும் (NITMS), பிர்லா
தொழில் நுட்பக் கழகம் (BIT) உள்ளிட்ட சுயநிதி நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களும்,மைய, மாநில உயர் கல்வி நிறுவனங்களும் இத் தேர்வை விருப்ப முறையில் ஏற்றிருக்கின்றன.
குறிப்பாகத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இது எவ்வாறு பயன்படும்?
என்.ஐ.டி ஒவ்வொன்றிலும் அது அமைந்துள்ள மாநிலத்து மாணவர்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து மீதியுள்ள 50 % இடங்கள். இதன்படி திருச்சி என்.ஐ.டி.,யில் உள்ள 9 பாடப்பிரிவுகளில் மொத்தம் சுமார் 400 இடங்கள் தமிழ்நாட்டுக்கே. இவ்வளவுதானா என்று கேட்கக் கூடாது. மற்ற எல்லா என்ஐடிகளிலுமுள்ள பிற மாநிலங்களுக்கான 50 % இடங்கள் அத்தனையுமே தமிழ் நாட்டுக்கே கிடைக்கலாமே, ராங்க் அடிப்படையில்! இவற்றில் வாரங்கல், சூரத் முதலிய சில என்.ஐ.டி.,கள் விருப்பப்பட்டியலில் முதலில் வருபவை. தவிர, தமிழ்நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் தஞ்சை சாஸ்த்ரா (SASTRA), காஞ்சி ஸ்ரீ சந்திர சேகரேந்திர ரஸ்வதி விஷ்வ மகா வித்யாலயா (SCSVM), கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகம், சென்னை டாக்டர் எம்ஜியார் கல்வி / ஆராய்ச்சிக் கழகம் (MGRERI) ஆகியவற்றில் முறையே, ஏறத்தாழ 470,120,200,800 இடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படுவது தமிழ் நாட்டு மாணவர்களுக்குப் பயன்படும் செய்தி.புதிய என்ஐடியில் ஒன்று சென்னைக்கு நெருக்கத்தில் உள்ள புதுச்சேரியில் வரவிருப்பதும்
கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் 50க்கு மேற்பட்ட கல்லூரிகளில் இடம் பெற வாய்ப்பு உண்டு.
புதிய என்.ஐ.டி.,கள் வரும் இடங்கள் எவை?
மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, கோவா, புதுச்சேரி, சிக்கிம், டில்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் இவை இடம் பெறும்.
எந்தப்பாடப்பிரிவுகளில் (BRANCHES) சேரஇயலும்?
ஆங்கில அகர வரிசைப்படி வேளாண்மைப் பொறியியலில் துவங்கி போக்குவரத்துப் பொறியியல் வரையிலான சுமார் 50 பொறியியல் பிரிவுகளில் சேர வாய்ப்பு உண்டு.
2009 ஆம் ஆண்டில் எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள், எத்தனை பேர் சேர்ந்தார்கள்?
நுழைவுத்தேர்வுக்கு 1010061 பேர் விண்ணப்பித்தனர்; 962119 பேர் எழுதினார்கள். ஏறத்தாழ 23680 இடங்கள் பிஇ/பிடெக் பிரிவுகளுக்கும், 860 இடங்கள் பி.ஆர்க்./ பி.பிளான். பிரிவுகளும் இருந்தன.இவை தவிர, மையக் கலந்தாய்வில் வராமல் தேர்வை மட்டும் பயன்படுத்திச் சேர்க்கை நடத்திக் கொண்ட கல்லூரிகள் இவற்றில் அடங்கவில்லை.
பி.ஆர்க்., படிப்பில் சேர இத்தேர்வின் இரண்டாம் தாளை எழுதுவது ஒன்றுதான் வழியா?
இல்லை. ஆர்கிடெக்சர் கவுன்சில் (COA) விதிப்படி அது அனுமதித்துள்ள நுழைவுத்தேர்வை எழுதித்தான் பி.ஆர்க்., படிப்பில் சேர வேண்டும். புனேவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் ஆர்கிடெக்சர் (NIASA) நடத்தும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் (NATA) எழுதியும் பி.ஆர்க்., சேரலாம். இது கம்ப்யூட்டர் வழி
நடத்தப்படும் ஒரு ஆன்லைன் தேர்வு.
ஏ.ஐ.இ.இ.இ., தேர்வுக்குப் பாடத்திட்டம் (Syllabus) உண்டா?
கணிதம், இயற்பியல், வேதியியல் மூன்றுக்கும் விரிவான பாடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் எந்த வகைப் பள்ளித் திட்டத்திலும் 11,12 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் படித்திருக்கக் கூடிய பொதுவான பகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
